

கார்கில் (Cargill) என்ற அமெரிக்காவின் உலகளாவிய உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் புகழ்பெற்ற இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை (ஐஐடி மெட்ராஸ்) உடன் இணைந்து ஐஐடி மெட்ராஸ்-ல் பி.எஸ்.டேட்டா சயின்ஸ் அப்ளிகேஷன்ஸ் படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கு முழு உதவித்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.
மெரிட்-கம்-மீன்ஸ் (Merit-cum-Means) கல்வி உதவித்தொகைக்கு தகுதியின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 7,500 புதிய மாணவர்களை சேர்க்கும் இத்திட்டத்தில், ரூ.5 லட்சத்திற்கும் குறைவான ஆண்டு வருமானம் உடைய 25% முதல் 30% பேரும் இடம்பெறுவார்கள்.
குறைந்த வருவாய்ப் பின்னணி கொண்ட 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஐஐடி மெட்ராஸ்-ல் உயர்கல்வி படிக்கும் தங்கள் கனவு நிறைவேற கார்கில் உதவித்தொகை பேருதவியாக இருக்கும்.
ஐஐடி மெட்ராஸ் பி.எஸ். டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் பட்டப்படிப்பை ஜூன் 2020-ல் அறிமுகப்படுத்தியது. இதுவரை 6 பருவங்களைக் நிறைவு செய்து தற்போது மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. சிறந்த ஆன்லைன் திட்டத்திற்கான QS-Wharton Reimagine கல்வி விருதுகளில் இத்திட்டத்திற்கு அண்மையில் வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டு உள்ளது.
இதுவரை 22,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்திட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ள நிலையில், 17,000 பேர் மும்முரமாகப் படித்து வருகின்றனர். 195 மாணவர்கள் பட்டப்படிப்பு அளவிலும், 4,500-க்கும் மேற்பட்டோர் டிப்ளமோ அளவிலும் உள்ளனர்.
கார்கிலின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துப் பேசிய ஐஐடி மெட்ராஸ் டீன் (முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் உறவுகள்) பேராசிரியர். மகேஷ் பஞ்சக்நுலா கூறும்போது, "பி.எஸ். படிப்பை மேற்கொண்டுள்ள மாணவர்களில் நான்கில் ஒருவர் பின்தங்கிய பின்னணியில் இருந்து வந்தவர். இந்தியா முழுவதும் தகுதியுடைய மற்றும் திறமையான மாணவர்களுக்கு ஐஐடி மெட்ராஸ் போன்ற மதிப்புமிக்க கல்வி நிறுவனம் ஒன்றில் தங்கள் கனவுக் கல்வியைத் தொடருவதற்கான வாய்ப்பை கார்கில் உதவித்தொகை வழங்குகிறது.
இந்த மாணவர்களில் பலர் முதல்தலைமுறைக் கல்லூரிப் பட்டதாரிகளாகவும், தினக்கூலிகள், விவசாயிகள் போன்ற குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். வங்கிகளில் ஏற்கனவே கடன் வாங்கியும், அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் உதவித்தொகை பெற்றும் படித்து வருகின்றனர். மாணவர்களின் குடும்ப நிதிச்சுமையைக் குறைக்க இந்த கல்வி உதவித் தொகை பேருதவியாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.
ஐஐடி மெட்ராஸ்-ன் பி.எஸ். டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் பட்டப்படிப்பு தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட கல்வித் திட்டமாகும். மாணவர்கள் சான்றிதழ், டிப்ளமோ அல்லது பட்டம் பெறும் வகையில் பல்வேறு கட்டங்களில் நுழையவோ, வெளியேறவோ செய்யலாம். ஐஐடி மெட்ராஸ் பட்டப்படிப்புத் திட்டம் நான்கு நிலைகளைக் கொண்டது. டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் பாடத்தில் பிஎஸ் பட்டம் பெற வேண்டுமெனில் மாணவர் ஒருவர் இந்த நான்கு நிலைகளையும் வெற்றிகரமாக முடித்திருக்க வேண்டும்.
இந்த கூட்டுமுயற்சி குறித்து கார்கில் பிசினஸ் சர்வீசஸ் நிறுவனத்தின் இந்தியத் தலைவரும், தொழில்நுட்பத் தலைவருமான திரு.சுமித் குப்தா பேசுகையில், "குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்கள் புரோகிராமிங் மற்றும் டேட்டா சயின்ஸ் பாடங்களில் இளங்கலை பட்டப்படிப்புக்கான நிதிஉதவியை வழங்க ஐஐடி மெட்ராஸ்- உடன் இணைந்து செயலாற்றுவதில் பெருமிதம் அடைகிறோம்.
கார்கிலைப் பொறுத்தவரை சமவாய்ப்புகளை உருவாக்குவதில் அக்கறையோடு செயல்படுகிறோம். புதுமை மற்றும் எதிர்காலத் திறமைகளில் முதலீடு செய்வதில் கவனம் செலுத்தி வருகிறோம். திறன்கள் மற்றும் அறிவை மேம்படுத்தவும், திறமையான பணியாளர்களை உருவாக்கவும் STEM கற்றலுக்கான இந்த ஆதரவு மிக முக்கியம் எனக் கருதுகிறோம். வரும்காலங்களில் சமூகங்களுக்கு இடையே பன்முகத்தன்மை, சமத்துவம், உள்ளடக்கம் ஆகியவற்றை மேம்படுத்த இத்திட்டம் மிக முக்கியமானதாகும்" என்றார்.
கற்பவர்களுக்கு நெகிழ்வுத் தன்மையை வழங்குவதுடன், மாணவர்கள் எதில் சாதிக்க விரும்புகிறார்களோ அதனைத் தேர்வு செய்யவும் இந்தத் திட்டம் வழிவகுக்கிறது. கடுமையான போட்டி நிறைந்த கூட்டு நுழைவுத் தேர்வில் (JEE) குறைவான விண்ணப்பதாரர்களே தகுதி பெறுகின்றனர்.
இதுபோன்று அல்லாமல் இத்திட்டம் மிகுந்த வெளிப்படையான, உள்ளடக்கிய தகுதிச் செயல்முறையைக் கொண்டுள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் கல்வி கற்போருக்கு ஐஐடியின் தரம்மிக்க கல்விக்கான வாய்ப்பு கிடைக்கிறது. பொருளாதார காரணங்களால் இடைநிறுத்தம் செய்யப்பட்ட அல்லது படிப்பைக் கைவிட்ட குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இத்திட்டம் மிகச் சிறந்த ஒன்றாகும்.