Published : 31 Jan 2023 07:07 AM
Last Updated : 31 Jan 2023 07:07 AM

பிளஸ் 1, பிளஸ் 2 செய்முறை தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடக்கம்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

சென்னை: பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: தமிழகத்தில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், பொதுத் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு கண்காணிப்பாளர்கள் நியமனம், வினாத்தாள், தேர்வுத்தாள் பாதுகாப்பு, மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு தாமதம் இல்லாமல் வந்து செல்ல பேருந்து வசதி உள்ளிட்டவை தொடர்பாக இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

கடந்தமுறை எந்த தவறும் நடைபெறாமல் பொதுத் தேர்வுகள் நடத்தி முடிக்கபட்டன. அதேபோல, எந்த முறைகேடுகளுக்கும் இடமின்றி இந்த முறையும் தேர்வுகள் சிறப்பாக நடத்தி முடிக்கப்படும். ஏற்கெனவே ஒரு திருப்புதல் தேர்வு முடிவடைந்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் 2-ம் திருப்புதல் தேர்வு முடிவடைந்துவிடும்.

மார்ச் 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. செய்முறைத் தேர்வுகளை முன்கூட்டியே நடத்தினால், மாணவர்கள் தேர்வுக்குத் தயாராக நேரம் கிடைக்கும் என்பதால், மார்ச் முதல் வாரத்திலேயே செய்முறைத் தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

தனித் தேர்வர்கள் பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் காலஅவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் மே 5-ம் தேதியும், பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மே 19-ம் தேதியும், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 17-ம் தேதியும் வெளியாகும். அதற்கேற்ற வகையில் விடைத்தாள் திருத்தம் நடைபெறும்.

கடந்த ஆண்டு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி, தேர்ச்சியடையாத மாணவர்கள் தற்போது 12-ம் வகுப்பு தேர்வையும், தேர்ச்சி அடையாத 11-ம் வகுப்பு தேர்வையும் ஒரே நேரத்தில் எழுதலாம். இதற்கான தேதிகளில் குளறுபடிகள் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து ஆலோசித்து, உரிய தீர்வுகாணப்படும். இவ்வாறு அமைச்ச கூறினார்.

அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் மார்ச் 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடத்த வேண்டும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பின்படி, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மார்ச் 1-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x