

கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் போன்ற பட்டயப் படிப்புகளுக்கு 2022-23-ம் கல்வி ஆண்டுக்கு மொத்தம் 2,036 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
இவற்றுள் 2,025 விண்ணப்பங்கள் தகுதியானவையாக கருதப்பட்டு அவற்றுக்கான தரவரிசைப்பட்டியல் கடந்த 27-ம் தேதி www.tnau.ucanapply.com என்ற முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2022-23-ம் கல்வியாண்டுக்கான பட்டயப் படிப்புகளுக்கான இணையதள கலந்தாய்வு நேற்று தொடங்கியது. வரும் 30-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
இணையதள கலந்தாய்வு தொடர்பான விரிவான தகவல் தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் அவர்களின் மின்னஞ்சல்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இணையதள கலந்தாய்வின்போது, விண்ணப்பதாரர்கள் எந்தகட்டணமும் செலுத்த தேவையில்லை. சான்றிதழ் சரிபார்ப்பின் போது, விண்ணப்பதாரர்களிடம் இருந்து கட்டணம் பெற்றுக் கொள்ளப்படும்.
விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட இணையதள பக்கத்தில் உள்நுழைந்து வரும் 30-ம் தேதி மாலை 5 மணி வரை தங்கள் கல்லூரி மற்றும் பாட விருப்பங்களை மாற்றிக் கொள்ளலாம். இறுதியாக உறுதி செய்யப்பட்ட விருப்பம், கல்லூரி, பாட இடஒதுக்கீட்டுக்கு பரிசீலிக்கப்படும். இது குறித்த தெளிவான, படிப்படியான செயல்முறை விண்ணப்பதாரர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு பிப்.1-ல் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும். கலந்தாய்வுக்கான வழிமுறைகள், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ள மாணவர்களின் விவரங்களை மேற்கண்ட பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.