வயதுவந்த அனைவருக்கும் கல்வி வழங்கும் புதிய இந்தியா எழுத்தறிவு திட்டத்துக்கு தொழில்நுட்ப கல்வி குழுமம் ஒப்புதல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: வயது வந்தோரின் கல்விக்காக புதிய இந்திய எழுத்தறிவு திட்டத்துக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பாக ஏஐசிடிஇ கல்விப் பிரிவு ஆலோசகர் ரமேஷ் உன்னிகிருஷ்ணன், அனைத்து தொழில்நுட்ப பல்கலைக்கழக துணை வேந்தர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது.

அனைவருக்கும் கல்வி என்பதை முக்கிய நோக்கமாக கொண்டு புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வயது வந்தோர் அனைவருக்கும் கல்வி வழங்க மத்திய அரசு நிதி அளிக்கும் வகையில் புதிய இந்தியா எழுத்தறிவு திட்டம் எனும் புதிய திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டு முதல் 2026-27 கல்வியாண்டு வரை அமலில் இருக்கும் இத்திட்டத்தின் மூலம் நாட்டில் படிப்பறிவு இல்லை என்னும் நிலை முற்றிலும் ஒழிக்கப்படும். இத்திட்டத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கு உயர்கல்வி மாணவர்களின் பங்கு அவசியமாகும்.

மாணவர்கள் தாங்கள் பயிலும் உயர்கல்வியின் ஒரு பகுதியாக, குறைந்தபட்சம் 15 வயதுக்கு மேற்பட்ட 5 பேருக்காவது கட்டாயம் கல்வி கற்பிக்க அறிவுறுத்த வேண்டும். இதற்கான பயிற்சியை மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்கள் வழங்க வேண்டும்.

மாணவர்களிடம் கற்றுத் தேர்ந்தவர்கள், கல்வி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக் கொள்ளும்போது அவர்களுக்கு கற்பித்த மாணவர்களுக்கும் கிரெடிட் மதிப்பெண் போன்றவற்றை வழங்க வேண்டும்.

பாராட்டு சான்றிதழ்

மேலும், மாணவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் பாராட்டுச் சான்றிதழையும் சம்பந்தப்பட்ட மாநில அரசு அல்லது பல்கலைக்கழகங்கள் வழங்கலாம். புதிய இந்தியா எழுத்தறிவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி, 100 சதவீதம் கல்வியறிவு பெற்ற நாடாக இந்தியா உருவாக அனைத்து கல்வி நிறுவங்களும் பங்காற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in