

சென்னை: தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்த அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, அவர் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது; தேசிய கல்விக் கொள்கை - 2020-ல் இடம்பெற்றுள்ள அம்சங்களை அமல்படுத்துவதற்கு ஏராளமான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அதன்படி உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதத்தை 2035-ம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக உயர்த்த நாட்டின் உயர்கல்வி கட்டமைப்பை இருமடங்காக அதிகரிக்க வேண்டும்.
இதற்கு மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து அதிகளவிலான முதலீடுகள் தேவைப்படுகின்றன.
உயர்கல்வி நிறுவனங்களின் புதுமையாக்கம் மற்றும் ஆய்வுத் திறனை மேம்படுத்துவதற்கு திறமையான ஆசிரியர்கள், ஆய்வக வசதிகள் அவசியமாகும்.தேசிய கல்விக் கொள்கை அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகிவிட்டன. ஆனால், அதை செயல்படுத்துவதற்கு நிதிநிலை அறிக்கையில் தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை.
தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் சரியான திசையில் உள்ளது. எனினும், கூடுதல் நிதியை ஒதுக்காமல் நாடு முழுவதும் அதன் பரிந்துரைகளை செயல்படுத்துவது நடைமுறையில் சாத்தியமில்லை. அதற்கு தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிட்டபடி உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்கும், 2 சதவீதம் ஆய்வுக்கும் ஒதுக்கப்பட வேண்டும். அப்போதுதான் திட்டமிட்ட இலக்கை நம்மால் அடைய முடியும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.