

சென்னை: தமிழக அரசின் ‘சிற்பி’ திட்டத்தில் இணைந்துள்ள 5,000 அரசுப் பள்ளி மாணவர்கள் ஒரே நேரத்தில் யோகா பயிற்சி செய்து, உலக சாதனை படைத்துள்ளனர்.
பள்ளி மாணவர்கள் ஒழுக்கம், கல்வியில் சிறந்து விளங்கவும், நாட்டுப்பற்று, நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ளவும் செப். 14-ம் தேதி `சிற்பி' திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதில் சென்னையைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்கள் 5 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, வாரந்தோறும் காவல் உள்ளிட்ட பல்வேறு துறையினர் மூலம் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று ‘சிற்பி’ திட்டத்தில் இணைந்துள்ள 5 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கான யோகா பயிற்சி நடந்தது. சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்தப் பயிற்சியைத் தொடங்கிவைத்தார்.
மேலும், அமைச்சர், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோரும் யோகா பயிற்சியில் கலந்து கொண்டார்.
ஓரே நேரத்தில் அரசுப் பள்ளிகளைசேர்ந்த 5,000 மாணவர்கள் யோகா பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டதற்காக உலக சாதனை யூனியன், தமிழக இளம் சாதனையாளர்கள் சாதனை புத்தகம், உலக இளம் சாதனையாளர்கள் புத்தகம் ஆகிய அமைப்பினர், காவல் ஆணையர் சங்கர் ஜிவாலிடம் சாதனைச் சான்றிதழ் வழங்கினர்.
இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த யோகா பயிற்சி, இளைய சமுதாயத்தினரிடையே தனிமனித ஒழுக்கத்தைக் கற்றுதரும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மாநகரங்களில், மகளிர் வாழ்வதற்கான சிறந்த பாதுகாப்பான நகரமாக சென்னை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணமான காவல் துறையினரின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களை, மாவட்ட சுகாதார மையங்களில் பணியில் அமர்த்துவதற்கான அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஏற்கெனவே இருந்த ஊதியத்தைவிட அதிக ஊதியம் வழங்கப்பட உள்ளது. மேலும், அவர்கள் தங்கள் சொந்த ஊரிலேயே பணிபுரிவதற்கான வாய்ப்பும் கிடைத்துள்ளது.
சிலரின் தூண்டுதலின் பேரிலேயே செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதை செவிலியர்கள் உணர வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், காவல் கூடுதல் ஆணையர் ஜெ.லோகநாதன், இணை ஆணையர் பி.சாமுண்டீஸ்வரி, துணை ஆணையர்கள் எம்.ராமமூர்த்தி, கே.சவுந்தரராஜன், எம்.ராதாகிருஷ்ணன், எம்.கோபால், ‘சிற்பி’ திட்ட ஒருங்கிணைப்பு ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.