பாரதியார் பல்கலை. தொலைமுறை கல்வி: 6 படிப்புகளுக்கு ஜன.11-ல் மாணவர் சேர்க்கை தொடக்கம்
கோவை: பாரதியார் பல்கலைக்கழக தொலைமுறை கல்விக் கூடத்தில் 6 படிப்புகளுக்கு வரும் 11-ம் தேதி மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது.
இதுதொடர்பாக பாரதியார் பல்கலைக்கழக தொலைமுறை கல்விக்கூடம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "பாரதியார் பல்கலைக்கழக தொலைமுறை கல்விக்கூடம் மூலம் நடப்பு கல்வியாண்டியில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள் நடத்த பல்கலைக்கழக மானியக்குழுவிடமிருந்து அனுமதி பெற்று சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. பாரதியார் பல்கலைக்கழக தொலைமுறை கல்விக் கூடம் பி.ஏ ஆங்கில இலக்கியம், பி.பி.ஏ ஆகிய இரண்டு இளநிலை பட்டப்படிப்புகள், எம்.ஏ. தமிழ் இலக்கியம், எம்.ஏ ஆங்கில இலக்கியம், எம்.ஏ. பொருளாதாரம், எம்.காம். வணிகவியல் ஆகிய முதுநிலை படிப்புகளை இணையவழியில் வழங்கி வருகிறது.
இதற்கான மாணவர் சேர்க்கை வரும் 11-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இணையவழியில் நடைபெறும் பாடப்பிரிவுகள் அனைத்துக்கும் கல்விக் கட்டணம், பாடம் நடத்துதல், தேர்வு, தேர்ச்சி முடிவுகள் அறிவித்தல், சான்று வழங்குதல் என அனைத்து செயல்பாடுகளும் இணையவழியிலேயே நடைபெறும். இணையவழி பட்டப்படிப்புகளில் சேர மாணவர்கள் இணையவழியிலேயே விண்ணப்பிக்க வேண்டும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை https://sde.b-u.ac.in என்ற பாரதியார் பல்கலைக்கழக தொலைமுறை கல்விக்கூட இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
