

திருச்சி/ புதுக்கோட்டை: மாநில அளவில் நடைபெற்ற கலைப் போட்டிகளில், கவிதை புனைதல் பிரிவில் திருச்சி மாணவியும், மணல் சிற்ப வடிவமைப்பில் கீரமங்கலம் மாணவியும் முதலிடத்தைப் பிடித்தனர்.
தமிழகத்தில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலை சார்ந்த பயிற்சிகளும், 6 முதல் பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் போட்டிகள் பள்ளி, வட்டார, மாவட்ட அளவில் நடத்தப்பட்டு, அதில் முதலிடம் பிடித்தவர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
அந்த வகையில், திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூரில் உள்ள ஹாஜியார் முகமது யூசுப் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவி சி.நிர்மலா, கவிதை புனைதல் பிரிவு போட்டியில் பள்ளி, வட்டார, மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து, திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் டிச.28-ம் தேதி நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றார். இதில், 38 மாவட்டங்களில் முதலிடம் பிடித்த மாணவர்கள் கலந்துகொண்டனர். இப்போட்டியின் முடிவில் சி.நிர்மலா முதலிடம் பிடித்தார்.
இதையடுத்து, ஜன.12-ம் தேதி நடைபெறவுள்ள விழாவில், மாணவி சி.நிர்மலாவுக்கு சான்றிதழ் மற்றும் கலையரசி என்ற பட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார். மாணவி சி.நிர்மலாவை இனாம்குளத்தூர் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினர் பாராட்டினர்.
மணல் சிற்ப போட்டி: இதேபோல, சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான மணல் சிற்பம் உருவாக்கும் போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவி அ.சர்மிளா வடிவமைத்த முதலை மணல் சிற்பம் முதல் பரிசுக்கு தேர்வானது. இதையடுத்து, மாணவி சர்மிளாவை பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.
இது குறித்து மாணவி சர்மிளா கூறியது: சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் 10 மூட்டை மணலை ரூ.2 ஆயிரத்துக்கு வாங்கி முதலை மணல் சிற்பத்தை வடிவமைத்தேன். வீட்டில் இருந்தும் சிறிதளவு மணல் கொண்டு சென்றிருந்தேன். மற்றவர்களெல்லாம், பல்வேறு வண்ணங்களை பயன்படுத்தியிருந்த நிலையில், நான் மட்டும் வண்ணம் இல்லாமல் வடிவமைத்திருந்தேன்.
வெற்றி கிடைக்குமா என்பதில் எனக்கு சற்று தயக்கம் இருந்தது. ஆனால், அந்த மணல் சிற்பத்துக்காக நான் முதல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டேன். எனக்கு உதவியாக இருந்த ஆசிரியர்கள், சக மாணவிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.