Published : 24 Dec 2022 03:53 AM
Last Updated : 24 Dec 2022 03:53 AM

ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வில் 86% பேர் தோல்வி: 21,543 பேர் மட்டுமே தேர்ச்சி

சென்னை: இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் (டெட் தாள்-1) 86 சதவீதம் பேர் தோல்வியடைந்துள்ளனர். தேர்வெழுதிய 1.5 லட்சம் ஆசிரியர்களில், 14 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் விவரம் டிஆர்பி (ஆசிரியர் தேர்வு வாரியம்) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு கடந்த அக்டோபர் 16-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டது.

1.53 லட்சம் பேர் பங்கேற்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இத்தேர்வில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 23 பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் கடந்த 7-ம் தேதி வெளியாகின. இதையடுத்து, கடந்த 22-ம் தேதி தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது. தேர்வர்கள் 3 மாதங்களுக்குள் (மார்ச் 22) தேர்ச்சி சான்றிதழைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், டெட் தேர்வு எழுதிய தேர்வர்களின் மதிப்பெண் விவரம் டிஆர்பி இணையதளத்தில் (www.trb.tn.nic.in) நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டது. டெட் தேர்வில் தேர்ச்சி பெற, பொதுப் பிரிவினர் 150-க்கு 90 மதிப்பெண்ணும், இடஒதுக்கீட்டுப் பிரிவினர் (பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி, எஸ்சி, எஸ்டி) 82 மதிப்பெண்ணும் பெற வேண்டும். டெட் தேர்வில் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றார்கள், தேர்ச்சி விகிதம் எவ்வளவு போன்ற விவரங்களை டிஆர்பி அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. எனினும், டிஆர்பி வெளியிட்ட மதிப்பெண் பட்டியல் அடிப்படையில் பார்க்கும்போது, மொத்த தேர்வர்களில் 21,543 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. இது 14 சதவீதம் ஆகும். எஞ்சிய 86 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை.

டெட் தாள்-2 தேர்வு எப்போது?: பட்டதாரி ஆசிரியர்களுக்கான டெட் தாள்-2 தேர்வுக்கு ஆன்லைனில் ஏற்கெனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆனால், தேர்வு எப்போது நடத்தப்படும் என்பதை டிஆர்பி இன்னும் அறிவிக்கவில்லை. ஜனவரி மாதத்துக்குப் பிறகு இந்த தேர்வு நடத்தப்படலாம் என்று தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x