ஏஐசிடிஇ இணையதளத்தில் 2-ம் ஆண்டு தொழில்நுட்ப கல்வி புத்தகங்கள் பதிவிறக்கம் செய்து பயன் பெறலாம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: புதிய கல்விக் கொள்கையின் ஒரு முன்னெடுப்பாக இந்திய மொழிகளில் பாடப் புத்தகங்களை உருவாக்கும் வகையில் தொழில்நுட்பக் கல்வி புத்தகம் எழுதும் திட்டத்தை அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) கடந்த கல்வி ஆண்டில் தொடங்கியது. முதல்கட்டமாக ஆங்கில மொழிகளில் முதலாம் ஆண்டு புத்தகம் உருவாக்கப்பட்டு, பின்னர் 12 இந்திய மொழிகளில் மாற்றியமைக்கப்படுகிறது.

தற்போது 2-ம் ஆண்டுக்கான தொழில்நுட்ப கல்வி புத்தகங்கள் உருவாக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் 42 பட்டப் படிப்புகள், 46 பட்டயப் படிப்புகளுக்கான புத்தகங்கள் வடிவமைக்கப்பட உள்ளன. இதை ஐஐடி, என்ஐடி போன்ற கல்வி நிறுவன பேராசிரியர்கள் எழுதுகின்றனர். தற்போது உருவாக்கப்பட்டுள்ள பைதான் புரோகிராமிங், சர்வேயிங் அண்ட் ஜியோமெடிக்ஸ், டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட 9 புத்தகங்கள் ஏஐசிடிஇ இணையதளத்தில் உள்ள இகும்ப் (ekumbh) முகப்பில் பதிவேற்றப்பட்டுள்ளன. பிற புத்தகங்களும் தமிழ், இந்தி,ஒடியா உள்ளிட்ட 12 மொழிகளில் விரைவில் பதிவேற்றப்படும்.

இவற்றை பதிவிறக்கம் செய்து மாணவர்கள் பயன் பெறுமாறு கல்வி நிறுவனங்கள் அறிவுறுத்த வேண்டும் என்று ஏஐசிடிஇ துணைத் தலைவர் எம்.பி.பூணியா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in