4 ஆண்டு இளநிலை பட்டப் படிப்புக்கான பாடத்திட்டம்: வழிமுறைகளை வெளியிட்டது யுஜிசி

4 ஆண்டு இளநிலை பட்டப் படிப்புக்கான பாடத்திட்டம்: வழிமுறைகளை வெளியிட்டது யுஜிசி
Updated on
1 min read

சென்னை: 4 ஆண்டு இளநிலை பட்டப் படிப்புக்கான பாடத்திட்டம் மற்றும் மதிப்பீடு வழிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) செயலர் பி.கே.தாக்கூர் வெளியிட்ட அறிவிப்பு:

தேசிய கல்விக் கொள்கை-2020 பரிந்துரைகளின்படி இளநிலை படிப்புக்கான பாடத்திட்டம் மற்றும் மதிப்பீடு கட்டமைப்புகளை யுஜிசி வடிவமைத்துள்ளது. அதன்படி நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய 4 ஆண்டு இளநிலை பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்படுகிறது. அதன்படி, இந்த படிப்பில் ஒருவர் எப்போது வேண்டுமானாலும் வெளியேறிவிட்டு மீண்டும் சேர்ந்து படிக்க முடியும்.

அதாவது, ஓராண்டில் வெளியேறுபவர்களுக்கு சான்றிதழ், 2-ம் ஆண்டுக்கு பட்டயச் சான்று, 3-ம் ஆண்டுக்கு இளநிலை பட்டச்சான்று, 4-ம் ஆண்டு வரை படித்து முடிப்பவர்களுக்கு இளநிலை பட்டத்துடன் ஹானர்ஸ் சான்றிதழும் வழங்கப்படும். அதிகபட்சம், சேர்ந்ததில் இருந்து 7 ஆண்டுக்குள் பட்டப்படிப்பை முடிக்க வேண்டும். ஒரே நேரத்தில் இருவேறு படிப்புகளை பயில்வதற்கும் இது உதவிகரமாக இருக்கும் என்பன உட்பட பல்வேறு அம்சங்கள் உள்ளன. அனைத்து கல்வி நிறுவனங்களும் இந்த வழிமுறைகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in