

சென்னை: இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு டிச.17-ல் சிறப்புப்பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து இல்லம் தேடி கல்வி திட்ட சிறப்புப் பணி அதிகாரி க.இளம் பகவத், அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக 1 முதல் 8-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயிலும்குழந்தைகளின் கற்றல் இடைவெளியை ஈடுசெய்ய இல்லம் தேடி கல்வி திட்டத்தின்கீழ் தன்னார்வலர்களை கொண்டு தினமும் மாலையில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கல்வியின் அடிப்படையான எண்ணறிவும், எழுத்தறிவும் அனைத்து குழந்தையும் பெற்றிருக்க வேண்டும். இதை கருத்தில்கொண்டு எண்ணும் எழுத்தும் திட்டத்துக்கு உறுதுணை புரியும் வகையில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையான மாணவர்களில் சிறப்பு கவனம் தேவைப்படுவோர் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு இல்லம் தேடி கல்வி மையங்களில் தனி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக தன்னார்வலர்களுக்கு குறுவள மைய அளவில்சிறப்புப் பயிற்சி தரப்பட உள்ளது. முதல்கட்டமாக கருத்தாளர்களுக்கு டிச.15-ம் தேதி ஒருநாள் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். அதன்பின் தன்னார்வலர்களுக்கு டிசம்பர் 17-ம் தேதி பயிற்சி வழங்கப்படும். இதுதொடர்பான முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் முறையாக மேற்கொள்ள வேண்டும்.