

சென்னை: பொறியியல் கல்லூரிகளில் தமிழ்ப் பாடங்களை பயிற்றுவிக்க, தமிழ் இலக்கியப் பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 510 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 7.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
புதிய பாடத் திட்டங்கள்: இந்நிலையில், தற்போதைய தொழில்நுட்பச் சூழலுக்கேற்ப பொறியியல் பாடத் திட்டம் மாற்றப்பட்டு, நடப்பு கல்வியாண்டு (2022-23) முதல் புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக, இளநிலை பொறியியல் படிப்புகளில் முதல் 2 பருவங்களில் (செமஸ்டர்) தமிழர் மரபு, தமிழரும்-தொழில்நுட்பமும் ஆகிய 2 கட்டாயப்பாடங்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டன. அதற்கான பாடத் திட்டம் தயாரிக்கப்பட்டு, கல்லூரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தப் பாடங்களை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் கல்வித் தகுதி விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக பல்கலை. பதிவாளர் ஜி.ரவிக்குமார், அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறி யிருப்பதாவது:
தமிழ் இலக்கியத்தில் பட்டம்: தமிழர் மரபு, தமிழரும்-தொழில்நுட்பமும் ஆகிய பாடங்களை மாணவர்களுக்கு கற்பிக்க தமிழ் இலக்கியத்தில் பட்டப் படிப்பை முடித்தவர்கள் தகுதியானவர்கள். மேலும், பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி படித்த அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் மனிதநேயப் பாடங்களின் போராசிரியர்களும் இந்தப் பாடங்களை பயிற்றுவிக்கலாம். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.