

சென்னை: படிப்புக்கும், விளையாட்டுக்கும் சம அளவு முக்கியத்துவம் தரவேண்டும் என்று லஞ்ச ஒழிப்புபிரிவு ஐஜி ஏ.டி.துரைக்குமார் வலியுறுத்தினார்.
சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் சிபிஎஸ்இ கிளஸ்டர் 6 தடகள போட்டிகளை லஞ்ச ஒழிப்பு பிரிவு ஐஜி ஏ.டி.துரைக்குமார் நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது: படிப்பும், விளையாட்டும் ஒருநாணயத்தின் இரு பக்கம் போன்றவை. ஆனால், நாம் படிப்புக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம். வளர்ந்த பிறகே,படிப்பைவிட விளையாட்டில் அதிகளவு ஈடுபாடு காட்டியிருக்கலாமோ என எண்ணுவோம். அது உண்மையும்கூட.
ஏனென்றால் கல்லூரி, அலுவலகம் போன்ற இடங்களில் மேலாண்மை, கூட்டு முயற்சி, முக்கிய முடிவெடுத்தல், தலைமை பண்பு, ஊக்கமளித்தல் உள்ளிட்ட முக்கிய பண்புகளை நாம் கொண்டிருப்பது அவசியம். சிறு வயதில் இருந்து விளையாட்டில் பங்கேற்பதன் மூலம் இவையெல்லாம் நம்மை எளிதாக வந்தடையும். எனவே, படிப்புக்கும், விளையாட்டுக்கும் சமஅளவு முக்கியத்துவம் தரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பாரதிய வித்யா பவன் (சென்னை) தலைவர் ‘இந்து’ என்.ரவி கூறும்போது, ‘‘இது ஒருவிளையாட்டு காலம். கிரிக்கெட்டில் ஏராளமான பிரபலங்கள் உள்ளனர். ஆனால், மற்ற போட்டிகளில் குறிப்பாக தடகள போட்டியில் தற்போதுதான் நமக்கு நீரஜ் சோப்ரா எனும் வீரர் கிடைத்துள்ளார். வரும் காலங்களில் தடகளத்திலும் அதிகளவு திறமையாளர்களை உருவாக்கி, பதக்கங்களைப் பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது’’ என்றார்.
இந்த நிகழ்வில், சிபிஎஸ்இ சென்னை மண்டல அதிகாரி தினேஷ் ராம் உள்ளிட்டோர் பேசினர். சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டிகள் நேற்று தொடங்கின. தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறும் போட்டிகளில் 600-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 11 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.