

சென்னை: சிறப்பாக செயல்பட்ட 114 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு விருதுகளை அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்.
பள்ளிக்கல்வித் துறை சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா,சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாற்றுத் திறனாளி மாணவ,மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நிகழ்வையும் அவர் தொடங்கி வைத்தார். அப்போது சைகை மொழியில் மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும், மாற்றுத் திறனாளி மாணவர்களுடன் சைகை மொழியில் அமைச்சர் கலந்துரையாடி அவர்களை ஊக்கப்படுத்தினார்.
விழாவில் அவர் பேசியதாவது: மாற்றுத் திறனாளிகளின் சிரிப்பில் மறைந்த முதல்வர் கருணாநிதியை நாங்கள் பார்க்கிறோம். தமிழ் மொழிக்கு எண்ணற்ற சிறப்புகள் உள்ளது என்றாலும், சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதற்கு மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மாற்றுத் திறனாளிகளுக்கு என்றும் உறுதுணையாக பள்ளிக்கல்வித் துறை இருக்கும்.
பெற்றோர், தங்கள் பிள்ளைகளை மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். நமது குழந்தைகளுக்கு என தனித்திறமை இருக்கிறது. அதில் கவனம் செலுத்தினாலே அவர்கள் வெற்றி பெறுவார்கள். இவ்வாறு அவர் பேசினார். பின்னர், பள்ளியில் திரையிடப்பட்ட ‘ஷ்வாஸ்' என்ற மராத்தி மொழி திரைப்படத்தை மாணவர்களுடன் சேர்ந்து பார்த்தார்.
இதேபோல, சிறந்த அரசுப் பள்ளிகளுக்கு விருது வழங்கும் விழா, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட 114 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், 32 நூலகங்கள் மற்றும் 8நூலகர்களுக்கு, பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ், விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.