

சென்னை: தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: நடப்பு கல்வியாண்டுக்கான 10, 11-ம்வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட உள்ளன. அதற்கான மாணவர்கள் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி, எமிஸ் செயலி வழியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் எமிஸ் தளத்தில் தங்கள் மாணவ, மாணவிகளின் விவரங்களை சரிபார்த்து, நவம்பர் 30-ம் தேதிக்குள் உறுதி செய்வதுடன், திருத்தம் இருப்பின் அவற்றை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இதனிடையே, இப்பணிகளை முடிக்க சில பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கூடுதல் அவகாசம் கேட்டுள்ளனர். அதையேற்று பொதுத்தேர்வு எழுதவுள்ள 10, 11-ம் வகுப்பு மாணவர்களின் விவரங்கள் சரிபார்ப்பு பணிகளை முடிப்பதற்கு டிசம்பர் 12-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.