Last Updated : 28 Nov, 2022 04:19 PM

 

Published : 28 Nov 2022 04:19 PM
Last Updated : 28 Nov 2022 04:19 PM

எந்தப் பள்ளியில் படித்தாலும் நிறைய சாதிக்கலாம்: மயில்சாமி அண்ணாதுரை அறிவுரை

படம்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி: “எந்தப் பள்ளியில் படித்தாலும் நம்மால் நிறைய சாதிக்க முடியும்” என்று இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை அறிவுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி பள்ளி கல்வித் துறை சார்பில் மண்டல அளவில் அறிவியல் கண்காட்சி காராமணிக்குப்பத்தில் உள்ள ஜீவானந்தம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று துவங்கியது. குறிப்பாக, தொடக்கப் பள்ளி 96, நடுநிலைப்பள்ளி 131, உயர்நிலைப் பள்ளி 119, மேல்நிலைப்பள்ளி 56, ஆசிரியர்களின் படைப்புகள் 30 என மொத்தம் 432 அறிவியல் படைப்புகள் இடம்பெற்றன. இன்று துவங்கிய மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சி 30-ம் தேதி வரை நடக்கிறது. இதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் மீண்டும் டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் மாநில அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சியில் இடம்பெறும்.

கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கண்காட்சியைத் திறந்து வைத்து கண்காட்சியை பார்வையிட்டார். விண்வெளி, நீர் சேமிப்பு, சோலார் சிஸ்டம், பேட்டரி வாகனம், தாவர வளர்ப்பு என பல படைப்புகள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது. இக்கண்காட்சியை இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பார்வையிட்டார். தொடர்ந்து, மாணவர்களுடன் கலந்துரையாடினர். அப்போது, மாணவ, மாணவிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். கேள்வி கேட்பதே அறிவியலை அறிய முதல்படி என்று விளக்கம் தந்தார்.

அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் மயில்சாமி அண்ணாதுரை கூறுகையில், "அரசுப் பள்ளியில் படிக்கும் இக்குழந்தைகள் சிறப்பாக கேள்வி எழுப்புவது மகிழ்ச்சியளிக்கிறது. அறிவியல் தொழில்நுட்பம் என்பது கேள்வியில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. அந்த வகையில், மாணவர்கள் சமுதாயம் சார்ந்த கேள்விகளும், படிப்பு சார்ந்த கேள்விகளும் கேட்கத்துவங்குவது அவசியம். பிள்ளைகள் எந்தப் பள்ளியில் படிக்கிறோம் என்பது முக்கியம் இல்லை. எந்தப் பள்ளியில் படித்தாலும் நம்மால் நிறைய சாதிக்க முடியும். அதற்காக வாய்ப்புகள் உள்ளன.

வாய்ப்புகள் கொடுப்பதற்கு சமுதாயமும், அரசும் உதவுகிறது. இதை நாம் முன்னெடுத்து சென்றால் இந்தியாவில் எதிர்காலத்தில் சிறப்பாக இருக்க முடியும். உலகில் அதிகமான இளைஞர் இருக்கக் கூடிய நாடாக இன்னும் சில காலத்திற்கு இந்தியாதான் இருக்கப் போகிறது. இந்தியாவில் உள்ள இளைய சமுதாயத்தால்தான் உலகத்திற்கு தேவையான பல அறிவியல் கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட இருக்கிறது. கரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக கல்வி சிறிது தடைப்பட்டிருந்தாலும் கூட, இன்னும் புது வேகத்துடன் அறிவியல், தொழில்நுட்பம் மூலம் கல்வித்துறை எப்படி கொண்டு செல்ல வேண்டும் என முயற்சி செய்கிறார்கள்.

அறிவியல் ஆர்வமும் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு தன்னார்வலர்கள் உதவி செய்து வருகிறார்கள். பல மாநிலங்களில் தனி அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. அதில் நானும் என்னை இணைத்துக் கொள்வேன். விண்வெளித் துறையை விட்டு வெளியே வந்துவிட்டேன். 40 ஆண்டுகள் எனக்கான வசதிகளை செய்து கொடுத்தது இந்தியாதான். திரும்ப இந்தியாவுக்கு செய்ய வேண்டும் என்றால் காசு பணத்தைவிட, என்னுடைய நேரத்தை மாணவர்களுக்காக அதிகமாக ஒதுக்க முடியும்" என குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x