Published : 20 Nov 2022 07:09 AM
Last Updated : 20 Nov 2022 07:09 AM

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலை தேர்வு - மரபு மீறாத எளிய வினாக்கள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு, ‘சவால்கள்' அதிகம் இன்றி, எதிர்பார்த்ததை விட எளிமையாக இருந்தன. சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற குரூப் 2 தேர்வுபோன்றே இந்த முறையும், அரசியல் நடுநிலைமை அநேகமாகக் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

கணிதம், நுண்ணறிவுப் பகுதிகளில் வினாக்கள் ‘குரூப்-1' தேர்வுக்குப் பொருத்தமற்றதாக மிகவும் சாதாரணமாக இருந்தன.

பெருக்குத் தொடர் வரிசை, வேகம் - தூரம், தனிவட்டி - கூட்டு வட்டி, ஆட்கள் - வேலை - நாட்கள், சதவீதம்... என்று நன்குபழக்கப்பட்ட பகுதிகளில் எளிதில் விடை கண்டுபிடிக்கிற கேள்விகளாக இருந்தன. ஆனாலும், ஒரு கேள்வி மட்டும் ஆங்கிலத்திலும் தமிழிலும் வெவ்வேறாக இருந்தது. ரூ.15,000க்கு முறையே 15%, 20%, 25% வீதம் மூன்று ஆண்டுகளுக்கு கூட்டு வட்டி (CI) எவ்வளவு? ஆங்கிலத்தில் இது கேள்வி; தெரிவிலும், 10,875 என்ற சரியான விடை இருந்தது. ஆனால் தமிழில், கூட்டு வட்டி என்று இல்லாமல், வட்டி என்று மட்டும் கேட்கப்பட்டு உள்ளது. இதன்படி விடை - 9000. இது தெரிவுப் பட்டியலில் இல்லை. எனவே, தமிழ் வினாவின்படி - ‘விடை தெரியவில்லை'! இந்தக் குழப்பம் மிக நிச்சயமாக தவிர்க்கப் பட்டிருக்க வேண்டும். என்ன செய்யப் போகிறது ஆணையம்? தவறு இல்லாத வினாத்தாள் சாத்தியமே இல்லையோ..?

அறிவியல் / சுற்றுச்சூழல் பகுதியில் ‘நேரடி வினாக்கள்' முறையாகப் பயின்ற தேர்வர்களுக்கு நல்ல ‘பயன்' தரும். இந்தப் பகுதியில் வினாக்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருப்பது மிகப் பெரிய ஏமாற்றம். பொருளாதாரம், நடப்பு நிகழ்வுகள் - பெரிதாக ‘சோதிக்கவில்லை'. மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் அநேகமாக சம அளவில் இடம் பெற்றுள்ளன.

புதிய கல்விக் கொள்கையின் அணுகுமுறை, ‘கதி சக்தி', ‘பெண் குழந்தை படிப்பு - பாதுகாப்பு', துப்புரவுத் தொழிலாளர் பாதுகாப்பு - வரவேற்புக்குரிய கேள்விகள். மாநில அரசின் ‘எண்ணும் எழுத்தும்' ‘மாவட்டமன நலத் திட்டம்' தமிழ்நாடு மாநிலம் பெற்றுள்ள கொள்கைகள், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்... குறித்த கேள்விகள் மிகவும் நியாயமானவை. தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் (சட்ட திருத்த மசோதா) சட்டம் 2016-ன் சிறப்பம்சம் குறித்த கேள்வி, சிறப்பானது.

‘கூற்று - காரணம்' தொடர்பு படுத்தும் இந்தக் கேள்வி உண்மையில் நல்ல தேர்வு:

‘இந்திய அரசாங்கம் பொருளாதார சார்ந்த திட்டங்களைத் தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் இன மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்துகிறது.' (கூற்று)

‘பொம்மை செய்தல், கூடை முடைதல், அகர்பத்தி மற்றும் பீடி சுற்றுதல், துணித் தையலகம், காலணி தயாரித்தல் போன்ற சிறு தொழில்களுக்குக் கடன் கொடுப்பதன் மூலம் ஏழை மக்கள் துணை வருமானம் பெற அரசு உதவி செய்கிறது.' (காரணம்) இளைஞர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி / கருத்துரை பற்றிய இந்தக் கேள்விக்காக பாராட்டலாம்.

அரசமைப்பு சட்டம் தொடர்பான வினாக்களில் ஒருவித ‘அரசியல் சாமர்த்தியம்' தெரிகிறது. குடியரசுத் தலைவரின் அதிகாரம், மாநில ஆளுநரின் அதிகாரம், நாடாளுமன்றம் சட்டமன்றங்களின் சட்டம் இயற்றும் அதிகாரம், மாநில முதலமைச்சர் தொடர்பான அரசமைப்பு விதிகள்.. ‘சுவாரஸ்யத் திணிப்பு'

ஜிஎஸ்டி கவுன்சில் பற்றிய அறிக்கைகள், தொழில்துறை உற்பத்தி வரிசை, ‘அதிகபட்ச' ஆதரவு விலை, வாங்கும் சக்தி - பொருள் உற்பத்தி, பவுத்த மதம் பற்றிய சரியான கூற்று, கூட்டாட்சி, சட்டத்தின் ஆட்சி, நவீன மக்களாட்சி நாட்டில் குடியுரிமை, பீடித் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள், சம ஊதியம், புலம்பெயர் தொழிலாளர்கள்.. இடம் பெற்றிருத்தல் - சிறப்பு.

தமிழ் இலக்கியம், திருக்குறள், சோழர்கால கல்வெட்டுகள், செய்யுள் வரிகள், மேற்கோள்கள், சமகாலப் படைப்புகள் உள்ளிட்டவை எதிர்பார்த்த வகையில், எதிர்பார்த்த அளவில் உள்ளன. தமிழ்ச் செய்யுள் வரிகளை அப்படியே ஆங்கிலத்தில் ‘டிரான்ஸ்லிடரேட்' செய்து தந்தமை, இயற்கை நீதிக்குப் புறம்பானதாய் இருக்கலாம்; சரியாகப் படவில்லை. தவிர்த்து இருக்கலாம்.

கலாச்சாரப் பரவல் - கலாச்சார நிலத் தோற்றம் குறித்த கேள்வி, உறுதியாய், தேர்வர்களை சிந்திக்க வைத்து இருக்கும்.

‘டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு, ‘யுபிஎஸ்சி' குடிமைப் பணித் தேர்வுக்கு இணையாக இருக்கிறதா?' மன்னிக்கவும். நிச்சயமாக இல்லை. இன்னும் தரமானதாக, இளைஞர்களின் அறிவுத் திறனுக்கு சவால் விடுவதாக வினாத்தாள் இருந்திருக்கலாம்.

நிறைவாக இரண்டு வினாக்கள் மட்டும்.

பாரதியார் குறித்த 2 வினாக்களுமே வெகு சாதாரணம். அதிலும், ‘எந்த தமிழ் கவிஞர் தேசியம், தேசிய ஒருமைப்பாட்டில் உணர்வுகளை தூண்டினார்?' என்ற கேள்வி..நிச்சயமாக ‘குரூப் 1 தரம்' இல்லை; இல்லவே இல்லை.

நிறைவாக, இந்தக் கேள்விதான் குரூப் 1 தேர்வுக்கான 'உரைகல்'!:

‘ஒரு ஆப்பிள் விலை ரூ 60, ஒரு கொய்யா விலை ரூ.90 மற்றும் ஒரு மாம்பழம் விலை ரூ.60. ஒரு மாதுளை விலை எவ்வளவு?'

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x