

மதுரை: அரசு கல்லூரிக் கல்வி இயக்கம் சார்பில், மகளிருக்கான ஐஏஎஸ் இலவச பயிற்சி வகுப்புகள் சென்னை ராணி மேரி கல்லூரி, மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் நடத்தப்படுகிறது.
மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடப்பாண்டிற்கான இப்பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்குகிறது. இப்பயிற்சிக்கான விண்ணப்பப் படிவம் கல்லூரிகளின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, சென்னை ராணி மேரி கல்லூரிக்கான படிவம் (www.queenmaryscollege.edu.in), மதுரை மீனாட்சி மகளிர் கல்லூரிக்கான விண்ணப்பம் (www.smgacw.org) என்ற இணையதளத்திலும் பார்க்கலாம். மீனாட்சிக் கல்லூரியில் பயிற்சி பெற விரும்புவோர் இக்கல்லூரிக்கான இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, நவ.24-ம் தேதிக்குள் ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி, மதுரை-02 என்ற முகவரிக்கு தங்களது பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் அனுப்பவேண்டும்.
விண்ணப்பத்துடன் பட்டப் படிப்புச் சான்றிதழ் நகல், ரூ. 200-க்கான வங்கி வரைவோலை ( மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி முதல்வர் பெயரில்) , சுய விலாசமிட்ட அஞ்சல் தலையுடன் கூடிய உறை ஆகியவற்றை இணைத்து அனுப்பவேண்டும்.
நுழைவுத் தேர்வு, நேர்காணல், பயிற்சி வகுப்பு ஆகியவை தேர்வு செய்யப்பட்ட கல்லூரியில் நடக்கும். விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு, கல்வித் தகுதி, தேர்வு சம்பந்தமான விவரம் அனைத்தும் கல்லூரி இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நுழைவுத் தேர்வு டிச.1-ல் நடக்கிறது. தேர்வு முடிவு டிச.5-ல் அறிவிக்கப் படும். இத்தகவலை மீனாட்சி கல்லூரி முதல்வர் சூ.வானதி தெரிவித்துள்ளார்.