

சென்னை: அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு வகுப்பு இன்று தொடங்குகிறது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு கடந்த மாதம் நடைபெற்றது.
இதில் இடஒதுக்கீடு ஆணை பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். அதேபோல், தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் ஆணை பெற்ற மாணவர்களும் கல்லூரிகளில் சேர்ந்து விட்டனர்.
நாடு முழுவதும் 2022-23-ம் கல்வி ஆண்டுக்கான எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு வகுப்புகளை நவ.15-ம் தேதி தொடங்க வேண்டுமென தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்திருந்தது. அதன்படி, தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் வகுப்புகள் இன்று தொடங்குகின்றன.
இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள், டீன்களிடம் கேட்டபோது, “கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்கள், பெற்றோருடன் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறும். தொடர்ந்து மாணவர்களுக்கு மருத்துவருக்கான உடை மற்றும் தேவையான பொருட்கள் வழங்கப்படும். ஜீன்ஸ் பேன்ட், டி-சர்ட், ஸ்லீவ்லெஸ் மேலாடைகளை அணியக் கூடாது என்பது போன்ற தேசிய மருத்துவ ஆணையத்தின் ஆடை கட்டுப்பாட்டு விதிமுறைகளை மாணவ, மாணவிகள் பின்பற்ற வேண்டும். கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க பேராசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.
இரண்டாம் கட்ட கலந்தாய்வு
முதல் சுற்று கலந்தாய்வில் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் எஸ்டி பிரிவினருக்கான 1 எம்பிபிஎஸ் இடம், 3 தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் எம்பிசி பிரிவில் 43 பிடிஎஸ் இடங்கள் நிரம்பவில்லை. இந்த 44 இடங்கள் மற்றும் முதல் சுற்றில் இடங்களை பெற்றவர்கள் கல்லூரிகளில் சேராததால் ஏற்படும் காலியிடங்கள் 2-ம் சுற்று கலந்தாய்வில் நிரப்பப்படும்.
இரண்டாம் சுற்று கலந்தாய்வு இந்த வார இறுதியில் ஆன்லைனில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய பல் மருத்துவக் கவுன்சில் அறிவித்த பின், அரசு, தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடங்கும்.