

பெரம்பலூர்: கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பெரம்பலூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தி இளைஞர்களை தயார்படுத்தி வருகிறார்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம்வட்டம் நல்லறிக்கை கிராமத்தைச்சேர்ந்தவர் பிரபாத் கலாம்(23). திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழில் எம்.ஏ படிப்பை 2021-ம் ஆண்டு முடித்தார். தற்போது, திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரியில் வேளாண்மை பட்டயப் படிப்பு படித்து வருகிறார்.
இவர், 2020-ம் ஆண்டு அரசு வேலைக்குச் செல்ல விரும்பி, போட்டித் தேர்வுக்கு பயிற்சி பெற தனியார் பயிற்சி மையங்களை அணுகியபோது, அவர்கள் கேட்ட கட்டணத்தை செலுத்த முடியவில்லை. இதனால் மன வேதனையடைந்த பிரபாத், தன்னைப் போன்று ஏழை இளைஞர்கள் போட்டித் தேர்வுக்கு பயிற்சி பெற இலவச பயிற்சி வகுப்பு நடத்தினால், பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என யோசித்தார்.
இதையடுத்து, தனது நண்பர்களிடம் ஆலோசனையையும், சேவை மனப்பான்மையுடன் வகுப்பு எடுக்க முன்வரும் பயிற்சியாளர்களிடம் உதவியையும் கேட்டார். தொடர்ந்து, 2021-ம் ஆண்டு வள்ளலார் இலவச பயிற்சி மையம் எனும் பெயரில் குன்னம் பகுதியில் அரசு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையத்தை தொடங்கினார். இவரது சேவை முயற்சியை அறிந்த தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடக்க விழாவுக்கு வந்து, பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார். அப்போதைய பயிற்சி வகுப்பில் 250 இளைஞர்கள் சேர்ந்தனர்.
பின்னர், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுகளுக்கு சேவை மனப்பான்மையுடன் கல்வியாளர்கள், தன்னம்பிக்கை பயிற்றுநர்கள் பலர் சிறப்பு பயிற்சி அளித்தனர். இந்நிலையில், அண்மையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இப்பயிற்சி மையத்தில் பயிற்சிபெற்றவர்களில் 6 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இது குறித்து ‘இந்து தமிழ்' நாளிதழிடம் பிரபாத் கலாம் கூறியது: குரூப் 4 தேர்வு முடிவு வெளியானால், இம்மையத்தில் பயிற்சி பெற்று தேர்வெழுதிய நிறைய பேர் தேர்ச்சி பெறுவார்கள் எனும் நம்பிக்கை உள்ளது. குன்னம் பகுதியில் பயன்படுத்தாத தனது கட்டிடத்தை ஒருவர் பயிற்சி வகுப்பு நடத்த இலவசமாக கொடுத்து உதவினார். அங்கு நூலகம், கணினி,இணையம், நகல் எடுக்கும் வசதியுடன் முழுமையான பயிற்சி வகுப்பை உருவாக்கி உள்ளோம். தற்போது, 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அனைத்து நாட்களும் வந்து பயிற்சி பெறுகின்றனர்.
தன்னார்வலர்கள் பலர் வழங்கும் நன்கொடை மூலம் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. எனது தனிப்பட்ட செலவுகளுக்காக மரக்கன்றுகள் விற்பனை செய்து பொருளாதாரம் ஈட்டி வருகிறேன். வள்ளலார் பயிற்சி மையம்குறித்து தகவலறிந்த கல்வியாளர்கள் பலர் ஆன்லைன் மூலம் வகுப்புஎடுக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
ஒரு எல்சிடி புரொஜெக்டர் இருந்தால் ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்த வசதியாக இருக்கும். இங்கு போட்டித் தேர்வுக்கான பயிற்சியுடன் அரசுப் பணியில் சேர்ந்து ஊழலற்ற நிர்வாகத்தை வழங்க வேண்டும் எனும்போதனையையும் இளைஞர்களுக்கு வழங்குகிறோம். இங்கு பயிற்சி பெற்று அரசு பணியில் சேரும் நபர்கள் ஊழலுக்கு இடமளிக்காமல் நேர்மையான நிர்வாகத்தை வழங்குவார்கள் எனும் நம்பிக்கை உள்ளது என்றார்.