

சென்னை: செயற்கைக்கோள் தயாரிப்பு பயிற்சிக்காக, தமிழக அரசுப் பள்ளிமாணவர்கள் பெங்களூரு புறப்பட்டுச் சென்றனர். நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, இந்திய தொழில்நுட்ப காங்கிரஸ் சங்கம் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தயாரிக்கும் 75 சிறிய வகை செயற்கைக்கோள்களை இஸ்ரோ ராக்கெட்கள் மூலம் விண்ணில் செலுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்காக தமிழகத்தில் இருந்து 5 மாணவர் செயற்கைக்கோள்கள் வடிவமைத்து அனுப்பப்பட உள்ளன. அதில் ஒரு செயற்கைக்கோள், முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்கள் பங்களிப்பில் தயாராக உள்ளது.
பிரம்மோஸ் மையத்தின் நிறுவனரும், மூத்த விஞ்ஞானியுமான ஏ.சிவதாணுப் பிள்ளை தலைமையின்கீழ் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆர்.எம்.வாசகம், கே.சிவன், மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் வழிகாட்டுதலின்படி இந்த மாணவர் செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 26 மாவட்டங்களில் இருந்து86 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் 12 பேர்மலைக் கிராமங்களை சேர்ந்தவர்கள். சுற்றுச்சூழல் பயன்பாட்டுக்காக சுமார் 1.5 கிலோ எடையில் தயாரிக்கப்பட உள்ள சிறிய செயற்கைக்கோளுக்கு ‘அகஸ்தியர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோள் தயாரிப்புக்காக மாணவர்களுக்கு பல்வேறு கட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்துக்கு மாணவர்களை 4 நாட்கள் விண்வெளி சுற்றுலா அழைத்துச் செல்ல முடிவானது. அதன்படி, 86 மாணவர்கள் மற்றும் 20 வழிகாட்டு ஆசிரியர்கள் அடங்கிய குழுவினர் சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு நேற்று புறப்பட்டுச் சென்றனர். அவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் கே.எஸ்.கந்தசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ராம்சரண் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கவுசிக் ஏ.புலிசா, இஸ்ரோ விஞ்ஞானி டி.கோகுல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.