

சென்னை: இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புக்கு (பிஎன்ஒய்எஸ்) விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் 28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின்கீழ் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்திலும், செங்கல்பட்டிலும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இரண்டு அரசு கல்லூரிகளிலும் 160 பிஎன்ஒய்எஸ் இடங்கள் உள்ளன. 17 தனியார் கல்லூரிகளில் 1,550 இடங்கள் உள்ளன.
ஐந்தரை ஆண்டுகள் கொண்ட இந்தப் படிப்புக்கு 2022 - 23-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த மாதம்27-ம் தேதி தொடங்கியது. www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத்துறை இணையதளத்தின் மூலம் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிப்பதற்கான அவகாசம் அக்.19-ம் தேதி வரை அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அது வரும் 28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த படிப்புக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற இருப்பதால், நீட் தேர்வில் தேர்ச்சியடையாதவர்கள், குறைந்த மதிப்பெண் பெற்ற பலர் இதற்கு விண்ணப்பித்து வருகின்றனர்.