

சென்னை: கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அக்.29-ம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்குகிறது.
நடப்பு ஆண்டு பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் https://adm.tanuvas.ac.in மற்றும் https://tanuvas.ac.in ஆகியஇணையதளங்களில் நேற்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு இடங்களுக்கு பொதுப்பிரிவில் விண்ணப்பித்தவர்களில் 12,909 பேர் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சந்திரசேகர், ஈரோடு மாவட்டம் முத்துப்பாண்டி, தருமபுரிமாவட்டம் ஹரினிகா ஆகியோர் 200-க்கு 200 மதிப்பெண்களுடன் முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர். பி.டெக் படிப்பில், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த சுபா கீதா 200-க்கு 199.5 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அஸ்வின்,திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஷாஜீகா ஆகியோர் 200-க்கு 198 மதிபெண்கள் பெற்று 2-ம் மற்றும் 3-ம் இடங்களை பெற்றுள்ளனர்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கான தரவரிசையில் 1,837 மாணவ, மாணவிகள் இடம்பெற்றுள்ளனர். இதில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்ஷா, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மகாலட்சுமிஆகியோர் 200-க்கு 196.5 மதிப்பெண்பெற்று முதல் மூன்று இடங்களைபிடித்துள்ளனர். இந்த படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 29-ம் தேதி தொடங்கி நடைபெற இருக்கிறது.
சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான (மாற்றுத் திறனாளிகள் மற்றும்விளையாட்டுப் பிரிவு) கலந்தாய்வுநேரடியாக 29-ம் தேதி நடக்கிறது.பொதுப் பிரிவு கலந்தாய்வு 29-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ஆன்லைன் வழியாக நடக்கிறது.
மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு மற்றும் சிறப்புப் பிரிவில் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான கலந்தாய்வு நவ. 2-ம் தேதி ஆன்லைனில் நடைபெற இருக்கிறது.