பிணையம் இல்லாமல் ரூ.10 லட்சம் கல்வி கடன் - மத்திய அரசு விரைவில் அறிவிப்பு

பிணையம் இல்லாமல் ரூ.10 லட்சம் கல்வி கடன் - மத்திய அரசு விரைவில் அறிவிப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: கல்விக் கடனுக்கான உத்தரவாத வரம்பை ரூ.10 லட்சமாக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசின் கடன் உத்தரவாத நிதி திட்டத்தின் கீழ் கல்விக் கடனுக்கு உத்தரவாதம் வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் தற்போது மாணவர் ஒருவர் அதிகபட்சமாக ரூ.7.5 லட்சம் வரை ஈட்டுப் பிணையம் அல்லதுமூன்றாம் நபர் உத்தரவாதம் இல்லாமல் கல்விக் கடன் பெற முடியும். இந்த வரம்பை ரூ.10 லட்சமாக அதிகரிப்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள நிதி சேவைகள் துறை, கல்வி அமைச்சகத்துடன் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

கல்விக் கடன் இலக்குகள் தொடர்பாக நிதி சேவைகள் துறை,12 அரசுத் துறை வங்கிகளுடன் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆலோசனை நடத்தியது. அப்போது கல்விக் கடன்களுக்கான உத்தரவாத வரம்பில் ஒரே மாதிரியான முறையை கொண்டு வரும்படி வங்கி அதிகாரி ஒருவர் கோரிக்கை விடுத்தார். சில மாநிலங்களில் ரூ.7.5 லட்சம் வரையும், சில மாநில அரசுகள் ரூ.10 லட்சம் வரையும் கல்வி கடன் உத்தரவாத வரம்பை நிர்ணயித்துள்ளதாக அவர் கூறினார்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கிறது. குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.4.5லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த கல்வி கடன்களுக்கு சலுகை காலமான படிக்கும் காலம், அதோடு கூடுதலாக ஓராண்டு காலத்துக்கு முழு வட்டி மானியம் பெறமுடியும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in