

சென்னை: பள்ளிக் கல்வித் துறை ஆணையர் க.நந்தகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2020-21 முதல் 2022-23-ம் ஆண்டு வரை உள்ள அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 2,849 முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1 காலி பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித்தேர்வு நடத்தப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பும் முடிக்கப்பட்டது.
இதையடுத்து ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (trb.tn.nic.in) வேதியியல் பாடத்துக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டோர் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (அக்.13) நடைபெற உள்ளது.
இதுதவிர பள்ளிக் கல்வித் துறையில் 270 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் கருணை அடிப்படையில் நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கவுள்ளார்.