ஆசிரியர்களுக்கான ‘கனவு ஆசிரியர்’ - பள்ளி மாணவர்களுக்கான ‘ஊஞ்சல்’, ‘தேன்சிட்டு’ இதழ்கள்: மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

ஆசிரியர்களுக்கான ‘கனவு ஆசிரியர்’ - பள்ளி மாணவர்களுக்கான ‘ஊஞ்சல்’, ‘தேன்சிட்டு’ இதழ்கள்: மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
Updated on
1 min read

சென்னை: பள்ளி மாணவர்களுக்கான ‘ஊஞ்சல்’ மற்றும் ‘தேன்சிட்டு’, ஆசிரியர்களுக்கான ‘கனவு ஆசிரியர்’ ஆகிய இதழ்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அத்துடன், பாரதி இளங்கவிஞர் விருதை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரசுப் பள்ளி மாணவர்களுக்கென பருவஇதழ்களை பள்ளிக்கல்வித் துறை தொடங்கியுள்ளது. அதன்படி, 4 மற்றும் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ‘ஊஞ்சல்’ என்கிற இதழும், 6-ம் வகுப்பில் இருந்து 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ‘தேன்சிட்டு’ என்ற இதழும் மாதமிரு முறை இதழாக வெளியிடப்படுகிறது. குழந்தைகளின் ஆக்கங்களோடு, அவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள், செய்திகள், சுவையான கதைகள் போன்றவை இந்த இதழ்களில் வெளியிடப்படும். இவை மட்டுமல்லாமல், ஆசிரியர்களுக்கென தனியே ‘கனவு ஆசிரியர்’ என்கிற மாதாந்திர இதழும் வெளியிடப்படுகிறது. ஆசிரியர்களின் படைப்புகளோடும் வகுப்பறைஅனுபவங்கள், அவர்களுக்கான சிறப்புக் கட்டுரைகளோடு ‘கனவு ஆசிரியர்’ இதழ் வெளியாக உள்ளது. ‘ஊஞ்சல்’, ‘தேன்சிட்டு’, ‘கனவு ஆசிரியர்’ ஆகிய 3 இதழ்களையும் முதல்வர் ஸ்டாலின்நேற்று வெளியிட்டார். பள்ளிக் குழந்தைகள், ஆசிரியர்கள் பெற்றுக்கொண்டனர்.

பாரதி இளங்கவிஞர் விருது: மேலும், மகாகவி பாரதியார் மறைந்த நூற்றாண்டின் நினைவாக செப். 11-ம் தேதி அரசின் சார்பில் இனி ஆண்டுதோறும் ‘மகாகவிநாள்’ கடைபிடிக்கப்படும் என்றும், இதையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதைப் போட்டி நடத்திமாணவன் ஒருவருக்கும், மாணவி ஒருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் ‘பாரதி இளங்கவிஞர் விருது’ வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்தார். அதன்படி, மகாகவி பாரதியார் நினைவு தின கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற சேலம், அம்மாபேட்டை நகரவை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் பா.பிரவீன் மற்றும் தூத்துக்குடி திருச்சிலுவை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ர.சைனி ஆகியோருக்கு ‘பாரதி இளங்கவிஞர் விருது’ மற்றும் பரிசுத் தொகையாக தலா ரூ.1 லட்சம் வழங்கி, வாழ்த்தினார். பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பாடநூல் கழகத் தலைவர் லியோனி, தலைமைச் செயலர் இறையன்பு, பள்ளிக்கல்வி செயலர் காகர்லா உஷா, ஆணையர் க.நந்தகுமார் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in