

சென்னை: காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று (அக்டோபர் 10) முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளன. தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் இயங்கும் பள்ளிகளில் 1 முதல் 12-ம்வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் காலாண்டுத் தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறை நேற்றுடன் முடிந்ததை அடுத்து அனைத்து தனியார், அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் இன்று (அக்டோபர் 10) திறக்கப்பட உள்ளன. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங்க உள்ளன. இடைநிலை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் 2-ம் கட்ட பயிற்சி இருப்பதால் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும் அக்.13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
இதற்கிடையே பள்ளிகள் திறப்பின் முதல் நாளில் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு திருத்தப்பட்ட விடைத்தாள்களை வழங்கி, அவர்கள் மதிப்பெண் குறைந்த பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மதிப்பெண் விவரங்களையும் எமிஸ் தளத்தில் முறையாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.