

கோவை: ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் பட்டப்படிப்பை நிறைவு செய்கின்றனர். அவர்களில், குறிப்பிட்ட சதவீதத்தினருக்கே படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கிறது. எஞ்சியுள்ளவர்கள், கிடைத்த வேலைகளுக்கு செல்லும் நிலைதான் உள்ளது. லட்சக்கணக்கில் செலவு செய்து பொறியியல் படிப்பை நிறைவு செய்யும் மாணவர்களும் இதில் விதிவிலக்கு அல்ல. வேலைக்குத் தேவையான திறன்களை மாணவர்கள் பெற்றிருக்காததே இதற்கு முக்கிய காரணம். எனவேதான், பிரபல மென்பொருள் நிறுவனமான ‘சோஹோ', பள்ளிப்படிப்பை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு, மென்பொறியாளர் ஆவதற்கு தேவையான திறன்களை ஊக்கத்தொகையுடன் இலவசமாக கற்றுத்தந்து, கடந்த 17 ஆண்டுகளாக தங்கள் நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது.
இதுதொடர்பாக சோஹோ பள்ளிகளின் தலைவர் ராஜேந்திரன் தண்டபாணி கூறியதாவது: அனைவராலும் பொறியியல் பட்டப்படிப்புக்கான செலவை செய்ய இயலாது. எனவேதான், காஞ்சிபுரம் மாவட்டம் வல்லாஞ்சேரி, தென்காசி மாவட்டம் மத்தளம்
பாறையில் ‘சோஹோ' பள்ளிகளை தொடங்கினோம். இங்கு, மென்பொறியாளர்களை உருவாக்க ‘சோஹோ ஸ்கூல் ஆஃப் டெக்னாலஜி’, வரைகலை நிபுணர்களை உருவாக்க ‘ஸ்கூல் ஆஃப் டிசைன்’, சந்தைப்படுத்துதல், விற்பனை பிரிவில் திறமையானவர்களை உருவாக்க ‘ஸ்கூல் ஆஃப் பிசினஸ்' செயல்பட்டு வருகிறது. இந்த 3 பிரிவுகளில் இரண்டை ஒரே நேரத்தில் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு ‘ஸ்கூல் ஆஃப் அட்வான்ஸ்டு ஸ்டடி' செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் 150 பேர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
இங்கு சேர, பத்தாம் வகுப்புக்கு பிறகு 3 ஆண்டுகள் டிப்ளமோ படிப்பு அல்லது பிளஸ் 2 முடித்த,படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் (17 வயது முதல் 20 வயது வரை உள்ளவர்கள் மட்டும்) விண்ணப்பிக்கலாம். நுழைவுத்தேர்வு, நேர்காணலுக்கு பிறகு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பத்தாம் வகுப்பு கணிதத்தின் அடிப்படையில் இந்த தேர்வு இருக்கும். சென்னை, தென்காசியில் இந்தத் தேர்வு நடைபெறும். சோஹோ பள்ளியில் சேர விரும்பும் மாணவர்கள் https://www.zohoschools.com/admission-form என்ற இணையதளத்தில் தற்போது விண்ணப்பிக்கலாம். தேர்வானவர்களுக்கான பயிற்சி 2023 ஏப்ரல், மே மாதங்களில் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
கட்டணம் இல்லை: சோஹோ பள்ளியில் 2 ஆண்டுகள் படிப்பு காலம் ஆகும். இதற்கு,எந்தவித கட்டணத்தையும் அவர்கள் பெறுவதில்லை. முதலாம் ஆண்டில் மாணவர்கள் சேர்ந்தவுடன் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. 2-ம் ஆண்டில் ‘இன்டெர்ன்ஷிப்' பயிற்சி காலத்தில், ஊக்கத்தொகையாக மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஞாயிறு தவிர மற்ற நாட்களில் மூன்று வேளையும் உணவு, ஸ்நாக்ஸ் ஆகியவற்றை இலவசமாக அளிக்கின்றனர். சேர்ந்த முதல் நாளிலேயே ஒவ் வொருவருக்கும் தனி மடிக்கணினி அளிக்கப்படுகிறது. அதில், வாரத்தில் அனைத்து நாட்களிலும் இணையதள வசதியை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். தங்குமிடம் மட்டும் அளிப்பதில்லை. அதுவும், முன்னாள் மாணவர்கள் உதவியுடன் ஏற்பாடு செய்து தரப்படுகிறது. ஆங்கிலத்தில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் புரிந்துகொள்ள சிரமப்படும் மாணவர்களுக்கு, தமிழிலும் பாடங்கள் நடத்தப்படுகின்றன. படிக்கும் காலத்தில் மென்பொருள் உருவாக்குவதல் குறித்த பயிற்சி, ஆங்கிலத்தில் பேச, படிக்க, புரிந்து கொள்ள கற்றுத்தரப்படுகிறது.
ஆண்டுக்கு ரூ.6 லட்சம் சம்பளம்: 2 ஆண்டுகள் படித்தபிறகு கிடைக்கும் சம்பளம் குறித்து ராஜேந்திரனிடம் கேட்டதற்கு, "படிப்பு காலம் முடிந்தவுடன் மாணவர்கள் நேரடியாக சோஹோ பணியாளராக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். சென்னை, தென்காசி, ரேணி குண்டா, டெல்லி, மும்பை ஆகிய இடங்களில் சோஹோ நிறுவன கிளைகள் உள்ளன. அங்கு அவர்கள் பணியாற்றலாம். அவர்களுக்கு தொடக்கத்தில் ஆண்டுக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை சம்பளம் அளிக்கப்படுகிறது. சோஹோ நிறுவனத்தில் பணியாற்றும் 10-ல் ஒருவர், சோஹோ பள்ளியில் படித்தவர்கள் ஆவர். இதுவரை, 1,200-க்கும் மேற்பட்டோர் படிப்பை நிறைவு செய்து இவ்வாறு பணியாற்றி வருகின்றனர்”என்றார்.சோஹோ பள்ளி வகுப்பறையில் பயிலும் மாணவர்கள்.