

சென்னை: பிஎட் படிப்புக்கான சேர்க்கைக்கு 4,939 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 7 அரசு மற்றும் 14 உதவி பெறும் பிஎட் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இளநிலை கல்வியியல் (பிஎட்) படிப்புகளுக்கு 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் பிஎட் பட்டப் படிப்புகளில் சேருவதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த செப்டம்பர் 24-ல் தொடங்கி அக்டோபர் 3-ம் தேதி நிறைவு பெற்றது. மாநிலம் முழுவதும் மொத்தம் 4,939 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் விண்ணப்பங்கள் தற்போது பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன.
இதைத் தொடர்ந்து மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் பாடவாரியாக தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதன்பின்னர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அக்டோபர் 12-ம் தேதி தொடங்கி நடைபெறும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.tngasaedu.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.