எம்இ, எம்பிஏ படிப்புக்கான டான்செட் நுழைவுத் தேர்வு பிப்.25, 26-ல் நடைபெறுகிறது: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

(கோப்புப்படம்).
(கோப்புப்படம்).
Updated on
1 min read

சென்னை: எம்இ, எம்பிஏ உள்ளிட்ட முதுநிலை படிப்புகளில் வரும் 2023-ம் ஆண்டில் சேர்வதற்கான டான்செட் நுழைவுத் தேர்வு பிப்ரவரி 25, 26-ம் தேதிகளில் நடைபெறுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள முதுநிலை பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்புகளில் சேர்வதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட்) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்திவருகிறது.

அதன்படி, வரும் 2023-ம் ஆண்டுக்கான டான்செட் தேர்வுக்கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

அடுத்த ஆண்டுக்கான டான்செட் நுழைவுத் தேர்வு பிப்ரவரி 25, 26-ம் தேதிகளில் நடைபெறும்.

அதாவது, பிப்ரவரி 25-ம் தேதி காலை எம்சிஏ படிப்புக்கும், மதியம் எம்டெக், எம்இ, எம்ஆர்க், எம்.பிளான் படிப்புகளுக்கும் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. அதேபோல, எம்பிஏ படிப்புக்கு பிப்ரவரி 26-ல் தேர்வு நடைபெறும். சூழல்களுக்கு ஏற்ப இந்த தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்படலாம். இவ்வாறு அண்ணா பல்கலை. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இந்த தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. 2023-ம் ஆண்டு டான்செட் தேர்வுக்கான விண்ணப்பம், தேர்வுக் கட்டணம் உள்ளிட்டவை தொடர்பான கூடுதல் தகவல்கள் www.annauniv.edu என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.

இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் 044-22358289 / 22358314 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in