Published : 28 Sep 2022 06:50 AM
Last Updated : 28 Sep 2022 06:50 AM

காலாண்டு விடுமுறை நீட்டிப்பு

சென்னை: பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை 3 நாட்கள் நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் (2022-23) 1 முதல் 12-ம் வகுப்புகளுக்கான காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வுகள் செப்.30-ம் தேதியுடன் நிறைவு பெறுகின்றன. தொடர்ந்து மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் ஆயுத பூஜை விடுமுறை வழங்கப்படும். அந்த விடுப்பு முடிந்து 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு அக்டோபர் 6-ம் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு அக்டோபர் 10-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் காலாண்டு விடுமுறையானது 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார் வெளியிட்ட அறிவிப்பு; எண்ணும், எழுத்தும் முதற்கட்டபயிற்சி தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டதால் அதற்கு பதிலாக ஈடுசெய்யும் விடுப்பு வழங்குமாறு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதன் அடிப்படையில் அக்டோபர் 6, 7, 8-ம் தேதிகள் ஈடுசெய்யும் விடுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை முடிந்து அக்டோபர் 10-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். மேலும்,தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு செப். 10 முதல் 12-ம் தேதி வரை எண்ணும் எழுத்தும் 2-ம்கட்ட பயிற்சி நடைபெற உள்ளது. அதனால் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அக்.13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x