நாடு முழுவதும் பள்ளிகளில் வேதியியல் கல்வியை மேம்படுத்த மத்திய அரசு திட்டம்

பிரதிநித்துவப் படம்
பிரதிநித்துவப் படம்
Updated on
1 min read

புதுடெல்லி: ராயல் சொசைட்டி ஆஃப் கெமிஸ்ட்ரி, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கழகம் ஆகியவை நாடு முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் வேதியியல் கல்வியை மேம்படுத்தும் திட்டத்துக்கு ஆதரவாக இணைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான செய்திக் குறிப்பு: அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கழகத்தின் 30-க்கும் மேற்பட்ட ஆய்வகங்களில், ராயல் சொசைட்டி ஆஃப் கெமிஸ்ட்ரி நடத்திய பரிசோதனையில் நாடு முழுவதுமிருந்து 2,000 மாணவர்கள் பங்கேற்றனர். அப்போது, பள்ளி குழந்தைகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை இலக்காக கொண்ட நாடு தழுவிய மேம்படுத்தப்பட்ட திட்டமான ஜிக்யாசா திட்டத்தில் இணைந்து பணியாற்ற உறுதியளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரண்டு அமைப்புகளும் கையெழுத்திட்டுள்ளன. நிதி சாராத இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், புதுப்பிப்பதற்கான வாய்ப்புடன், குறைந்தது மூன்று ஆண்டுகள் செல்லுபடியாக கூடியதாக இருக்கும்.

ஜிக்யாசா திட்டம், நாட்டில் தற்போதுள்ள கல்வித் திட்டங்களை மேம்படுத்தும். உதாரணமாக, தற்போதைய ஆசிரியர் பயிற்சி திட்டம் மற்றும் வேதியியல் முகாம்களை விரிவுப்படுத்த உதவும். மேலும், பல்வேறு இணையவழி கல்வி திட்டங்களை தொடங்கும்.

ஜிக்யாசா திட்ட தொடக்க நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சிக் கழகத்தின் அனைத்து ஆய்வகங்களையும் உள்ளடக்கிய உலகளாவிய பரிசோதனையை ஏற்பாடு செய்துள்ளது. இதில், 2,000 பள்ளி மாணவர்கள், 150 ஆசிரியர்கள் மற்றும் 350 தன்னார்வலர்கள் 30-க்கும் மேற்பட்ட ஆய்வகங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சோதனைகளில் கலந்து கொண்டனர்.

கடலியல் மற்றும் சுரங்கம் முதல் ரசாயனங்கள் துறை, நானோ தொழில்நுட்பம் வரை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சிக் கழகம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் ஆராய்ச்சி மையங்களை கொண்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in