Published : 19 Sep 2022 04:05 AM
Last Updated : 19 Sep 2022 04:05 AM

கோவை அரசு இசைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை அக்டோபர் 5 வரை நீட்டிப்பு

கோவை

கோவை அரசு இசைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் அக்டோபர் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோவை மலுமிச்சம்பட்டியில் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி இயங்கி வருகிறது.

தமிழக அரசின் கலைப்பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் இக்கல்லூரியின் தேர்வுகள் அனைத்தும் தமிழ்நாடு டாக்டர். ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைபல்கலைகழகத்தின் மூலமாகநடத்தப்பட்டு அதற்கான சான்றிதழ்கள் இப்பல்கலைக்கழகத்தி னால் வழங்கப்பட்டு வருகின்றது.

கல்லூரியின் மாணவர் சேர்க்கை தொடர்பாக முதல்வர் (பொறுப்பு) ஏ.வி.எஸ். சிவக்குமார் கூறியதாவது: இக்கல்லூரியில் பல்வேறு இசைத் துறைகளில் பயிலும் மாணவர்கள் தங்களது துறைகளில் மிகச் சிறந்த தொழில்முறை கலைஞர்களாக உருவாவதற்கும், அரசு மற்றும் பல்வேறு இசை நிறுவனங்களில் இசை ஆசிரியர்களாக பணி பெறும் வாய்ப்பும் உள்ளது.

மேலும், தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரிகளிலும், மாவட்ட அரசு இசைப்பள்ளிகளிலும் இசைத்துறையில் விரிவுரையாளர்களாகவும், ஆசிரியர்களாகவும் வேலை வாய்ப்பு பெற முடியும். இதுதவிர, அரசுஉயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் இசை பிரிவில் இசை ஆசிரியர்களாக வேலைவாய்ப்பு பெறலாம்.

இங்கு பட்டயப் படிப்பில் மூன்றாண்டுகள் குரலிசை, வயலின், வீணை, பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில்,இசை ஆசிரியர் பயிற்சி (ஓராண்டு) ஆகியவற்றில் சேர பத்தாம் வகுப்புதேர்ச்சியுடன் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பட்டப்படிப்பில் மூன்று ஆண்டுகள் குரலிசை, வயலின், வீணை, பரதநாட்டியம் போன்ற துறைகளில்பயில்வதற்காக 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு வயது வரம்பு இல்லை.

பட்டப்படிப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படுகிறது. கல்வி உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.500 வீதம் வழங்கப்படுகிறது. கல்லூரி வந்து செல்வதற்கு இலவச பேருந்து பயண சலுகை அளிக்கப்படுகிறது. மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை 0422 – 2611196 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x