

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், விபா நிறுவனம், என்.சி.இ.ஆர்.டி ஆகியவை இணைந்து தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வு தேர்வை ஒவ்வோர் ஆண்டும் நடத்தி வருகின்றன.
அறிவியல் மனப்பான்மையை மாணவர்களிடம் வளர்ப்பதோடு, அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறையில் ஈடுபாட்டை அதிகரிக்கவும் இத்தேர்வு நடத்தப் படுகிறது.
மாணவர்கள் தாங்கள் பயின்று வரும் பள்ளியில் இருந்தே இத்தேர்வை எழுதலாம். அல்லது வீட்டில் இருந்தவாறே இத்தேர்வை இணைய வழியில் எழுதலாம். வரும் நவம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இணையவழியில் தேர்வு நடைபெற உள்ளது.
இந்தத் தேர்வினை ஆங்கிலம் தவிர தமிழ், மராத்தி மற்றும் தெலுங்கு ஆகிய பிராந்திய மொழிகளிலும் மாணவர்கள் தேர்வு எழுதலாம்.
தமிழ் வழியில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேசிய அளவிலான தேர்வு வரை அனைத்தும் தமிழிலேயே நடைபெறும். தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 30-ம் தேதி கடைசி நாளாகும்.
ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் www.vvm.org.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். மொத்தம் 100 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும்.
மாநில அளவில் வகுப்புக்கு 3 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு ரொக்கப்பரிசாக முறையே ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 வழங்கப்படும். தேசிய அளவில் ஒவ்வொரு வகுப்பிலும் ( 6 முதல் பிளஸ் 1 வரை) முதல் 2 இடங்களை பெறும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவிலான முகாமுக்கு அழைக்கப்படுவார்கள்.
தேசிய அளவில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்படும். கடந்த ஆண்டு முதல் தேசிய அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, ஓராண்டுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
பள்ளி, மாவட்ட, மாநில அளவிலான பரிசுகள், பதிவு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் மாநில ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரானை 9942467764 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.