இஸ்ரோ விண்வெளி கல்வி திட்டத்தில் நீலகிரியில் 5 பழங்குடியின மாணவர்கள் தேர்வு

இஸ்ரோ விண்வெளி கல்வி திட்டத்தில் நீலகிரியில் 5 பழங்குடியின மாணவர்கள் தேர்வு
Updated on
1 min read

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி, 75 செயற்கைக்கோள்கள் ஏவும் இஸ்ரோவின் திட்டத்தில் தமிழகம் சார்பில் விண்ணுக்கு ஏவப்படும் அகஸ்தியர் செயற்கைக்கோள் தயாரிப்பு பணிகளை பார்வையிடும் வாய்ப்பும், செயற்கைக்கோள்கள் பற்றி தெரிந்துகொள்ளும் சந்தர்ப்பமும் கோத்தகிரியை சேர்ந்த இருளர் பழங்குடியின மாணவர்கள் 5 பேருக்கு கிடைத்து உள்ளது.

கெங்கரை ஊராட்சி தலைவர் முருகன் தலைமையில் ‘ஸ்ட்ரீட்லைட் பவுண்டேசன்’ அமைப்பினர் கெங்கரையில் 2, கரிக்கையூரில் 2, மெட்டுக்கல்லை சேர்ந்த 1 மாணவர் என 5 பேரை தேர்வு செய்துள்ளனர்.

இது குறித்து கோத்தகிரி அருகே கரிக்கையூர் அரசு உண்டு உறைவிடப் பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திர பாண்டியன் கூறும்போது, ‘‘தமிழகத்தில் இருந்து 75 அரசுப் பள்ளி மாணவர்களை இஸ்ரோ தேர்வு செய்தது.

அதில் கரிக்கையூர் பழங்குடியின பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர் ராஜன் மற்றும் மாணவி ரேவதி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பெங்களூரு இஸ்ரோ மையத்தின் முன்னாள் விஞ்ஞானி சிவதானுபிள்ளை, ஞாயிற்றுக் கிழமை தோறும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுத்து வருகிறார்.

இந்த மாணவர்கள் செல்போன் சிக்னல் கிடைக்காத வனப்பகுதி கிராமத்தில் வசித்து வருகின்றனர். இதனால் பாடங்களை நானும் படித்து, அவர்கள் பள்ளிக்கு வரும்போது கற்பித்து வருகிறேன்.

இவர்களுக்கு 8 பிரிவுகளாக ஆன்லைன் வகுப்புகளும், 2 நேர்முக வகுப்புகளும் நடைபெற உள்ளன. தொடர்ந்து இஸ்ரோவுக்கு சென்று செயற்கைக் கோள் தயாரிப்பு முறைகள் குறித்து நேரில் பார்வையிடவும், செயற்கை கோள் ஏவப்படும் நாளில் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவும் இம்மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in