Published : 17 Sep 2022 07:29 AM
Last Updated : 17 Sep 2022 07:29 AM

தொடக்கப் பள்ளி மாணவருக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு: அக்.10-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்

சென்னை: தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை 4 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை அக்.9-ம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டு, 10-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வியில் நடப்பு கல்வி ஆண்டில் (2022-23) கடந்த ஜூன் 13-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் அளவில் முதல் பருவத் தேர்வுகள் கடந்த மாதம் நடத்தி முடிக்கப்பட்டன.

இதற்கிடையே, இந்த கல்வி ஆண்டுக்கான நாள்காட்டியை பள்ளிகள் திறப்புக்கு முன்னரே தமிழக அரசு வெளியிட்டது. அதில்எந்தெந்த நாட்களில் பள்ளிகள் இயங்கும், விடுமுறை விவரங்கள், காலாண்டு, அரையாண்டு, பொதுத் தேர்வு தகவல்கள் இடம்பெற்றிருந்தன. சூழலுக்கேற்ப அதில் மாற்றம் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், காலாண்டு தேர்வு விடுமுறையில் தற்போது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, 1 முதல் 12-ம்வகுப்புக்கான காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் 21 முதல் 30-ம் தேதி வரை மாவட்ட அளவில் நடைபெறும். இதற்கான கால அட்டவணை, வினாத்தாள்கள் ஆகியவை முதன்மை கல்வி அலுவலகம் மூலம் தயாரித்து பள்ளிகளுக்கு வழங்கப்படும்.

இதில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ‘எண்ணும் எழுத்தும்’ செயலி வழியாகதொகுத்தறி மதிப்பீடு நடத்தப்படும். தொடர்ந்து மாணவர்களுக்கு காலாண்டு, ஆயுதபூஜை விடுமுறை அக்டோபர் 1 முதல் 5-ம்தேதி வரை வழங்கப்படும் என்றுஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

பயிற்சி வகுப்பால் மாற்றம்

இந்நிலையில், தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு 2-ம் பருவத்துக்கான ‘எண்ணும் எழுத்தும்’ பயிற்சி அக்டோபர் 6 முதல்8-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. அதற்கேற்ப, விடுமுறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, 1 முதல் 5-ம் வகுப்புக்கு அக்.9-ம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டு, அக்.10-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். 6 முதல் 12-ம் வகுப்புக்கு அக்டோபர் 5-ம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டு, அக்.6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x