பொறியியலில் பொதுப் பிரிவினருக்கான முதல்சுற்று கலந்தாய்வில் 10,707 இடங்கள் நிரம்பின

பொறியியலில் பொதுப் பிரிவினருக்கான முதல்சுற்று கலந்தாய்வில் 10,707 இடங்கள் நிரம்பின
Updated on
1 min read

சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கையில் பொதுப் பிரிவு கலந்தாய்வின் முதல் சுற்றில் 10,707 இடங்கள் நிரம்பின. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 431 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு 1 லட்சத்து 48,811 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி தொடங்கியது.

முதல்கட்டமாக மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 20 முதல் 24-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதில் 668 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதன் பிறகு, பொதுப் பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 10-ம் தொடங்கி நடந்து வருகிறது. இதில் முதல் சுற்றில் பங்கேற்க, தரவரிசையில் முதல் 14,546 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் 12,294 மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொண்ட நிலையில் 9,502 பேர் மட்டுமே இடங்களை உறுதிசெய்துள்ளனர்.

இதேபோல, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கான முதல் சுற்று கலந்தாய்வில் அழைக்கப்பட்ட 334 மாணவர்களில் 252 பேர் இடங்களை தேர்வு செய்துள்ளனர்.
மேலும், தொழிற்கல்வி பிரிவினருக்கான கலந்தாய்வில் 104 அரசுப் பள்ளி மாணவர்கள் உட்பட 953 பேருக்கு சேர்க்கை இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் முதல் சுற்றில் 10,707 இடங்கள் நிரம்பியுள்ளன. தொடர்ந்து எஞ்சிய இடங்களுக்கான கலந்தாய்வு பல்வேறு சுற்றுகளாக நவம்பர் 13-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in