

கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் மாணவர்களான ப.பூவரசன், சி.யுவராஜா ஆகியோர், அறிவியல் ஆசிரியர் பெ.தனபால் வழிகாட்டுதலில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கினர்.
இதில், ப.பூவரசன் செல்போன் ப்ளூ டூத் மூலம் ரோபோவை கட்டுப்படுத்தும் அமைப்பையும், சி.யுவராஜா இலக்கைக் கண்டுபிடிக்கும் ரோபோவையும் உருவாக்கினர்.
கோவையில் அண்மையில் தனியார் அமைப்பு நடத்திய இளம் ஐன்ஸ்டீன் விருது நிகழ்ச்சியில் இவ்விரு படைப்புகளும் முறையே 2 மற்றும் 3-ம் பரிசுகளை வென்று, சர்வதேச போட்டிக்கு தேர்வாகின.
இதைத் தொடர்ந்து, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் செப்.10,11-ம் தேதிகளில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் கண்காட்சியில், பஞ்சப்பட்டி மாணவர்களின் படைப்புகளுடன் சர்வதேச அளவில் மொத்தம் 44 படைப்புகள் பங்குபெற்றன.
இவற்றில், ப.பூவரசனின் செல்போன் ப்ளூ டூத் மூலம் ரோபோவை கட்டுப்படுத்தும் கண்டுபிடிப்பு சர்வதேச அளவில் 3-ம் பரிசாக இளம் ஐன்ஸ்டீன் என்ற விருதை பெற்றது.
இதையடுத்து, இளம் ஐன்ஸ்டீன் விருது பெற்ற மாணவர் ப.பூவரசனை கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் ந.கீதா அண்மையில் பாராட்டி, புத்தகம் பரிசு வழங்கினார்.
இதேபோல, பள்ளிக் கட்டிடக் குழுத் தலைவர் மா.அழகப்பன், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கா.பாலமுருகன், முன்னாள் மாணவர்கள் பூவரசனுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.
இந்நிகழ்வின்போது, பள்ளித் தலைமை ஆசிரியர் ரா.அங்கயற்கண்ணி, வழிகாட்டி ஆசிரியர் பெ.தனபால், நேர்முக உதவியாளர்(உயர்நிலை) வீ.ரத்தினம் ஆகியோர் உடனிருந்தனர்.