Published : 15 Sep 2022 07:10 AM
Last Updated : 15 Sep 2022 07:10 AM

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கற்றல் செயலி மூலம் மதிப்பீடு: தொடக்கக் கல்வித் துறை அறிவிப்பு

சென்னை: தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் செயலி மூலம் மதிப்பீட்டு பணிகள் நடத்தப்பட உள்ளதாக தொடக்கக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:

எண்ணும் எழுத்தும் பாடத்திட்டம் சார்ந்து தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடத்துக்கான வளரறி மதிப்பீட்டு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இதையடுத்து அரசு, அரசு உதவி பள்ளிகளில் 1 முதல் 3-ம்வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் சார்ந்த தொகுத்தறி மதிப்பீட்டை (Summative Assessment) செப்டம்பர் 19 முதல் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்கவேண்டும். இந்த தொகுத்தறி மதிப்பீடும் எண்ணும் எழுத்தும் செயலி மூலமே நடைபெறும்.

மேலும் , 4, 5-ம் வகுப்பு பயிலும்மாணவர்களுக்கு தொகுத்தறி மதிப்பீட்டுக்கான வழிகாட்டுதல்கள் செப்டம்பர் 16, 17-ம் தேதிகளில் அலுவல் ஆய்வு கூட்டத்தில் வழங்கப்படும். அதன்பின் 4, 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 26 முதல் 30-ம் தேதி வரை தொகுத்தறி மதிப்பீடு நடத்தப்பட வேண்டும்.

இந்த மதிப்பீடு பணிகளை முழுமையாக நடத்தி முடிப்பதற்கான அறிவுறுத்தல்களை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அந்தந்த முதன்மைக்கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வுக்கு பதிலாக இந்த தொகுத்தறி மதிப்பீடு நடத்தப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x