28 தகைசால் பள்ளிகளை உருவாக்க தமிழக அரசு ரூ.169 கோடி ஒதுக்கீடு

28 தகைசால் பள்ளிகளை உருவாக்க தமிழக அரசு ரூ.169 கோடி ஒதுக்கீடு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் 28 தகைசால் பள்ளிகளை உருவாக்க ரூ.169 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் தகைசால் பள்ளிகள் திட்டத்தை கடந்த 5-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் சென்னையில் தொடங்கி வைத்தார். அந்த வகையில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள், நவீன கணினி மற்றும் அறிவியல் ஆய்வகங்கள், ஒருங்கிணைந்த நூலகம், விளையாட்டு, கலைகள், இலக்கியம் என அனைத்தும் சேர்ந்த ஒரு முழுமையான கல்வியை நேரிடையாகவும், இணைய வசதிகளை பயன்படுத்தியும் மாணவர்களின் கற்றல் திறன்கள் மேம்படுத்தப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

மேலும், அதிநவீன தொழில்நுட்ப டிஜிட்டல் வசதிகளுடன் அமைக்கப்படும் தகைசால் பள்ளிகள் மூலம் அளிக்கப்படும் கல்வியால் மாணவர்களிடம் ஒருங்கிணைந்த வளர்ச்சி ஏற்படும் என்று பள்ளிக்கல்வி துறை தெரிவித்தது. அந்தவகையில், ரூ.171 கோடியே 7 லட்சத்து 53 ஆயிரத்து 600 திட்ட மதிப்பீட்டில் 28 தகைசால் பள்ளிகள் தமிழகத்தில் அமைக்க திட்டமிடப்பட்டது.

இந்நிலையில், 28 தகைசால் பள்ளிகளை அமைக்க ரூ.169 கோடியே 42 லட்சத்து 36 ஆயிரம் நிதியை தமிழக அரசு விடுவித்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.6 கோடியே 5 லட்சத்து 8 ஆயிரத்து 430 ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. மேலும், ஏற்கெனவே தகைசால் பள்ளிகளாக தேர்வான பள்ளிகளில் தேவையான வசதிகளை ஏற்படுத்தி புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசுப் பள்ளிகளில் 62 ஆயிரத்து 460 மாணவ, மாணவிகள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in