

வரும் 2028-ம் ஆண்டுக்குள் வேலை செய்வோர் எண்ணிக்கையில் சீனாவை இந்தியா விஞ்சும் எனமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தார்.
வண்டலூர் அருகே மேலக்கோட்டையூரில் அமைந்துள்ள மத்திய அரசின் இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனத்தின்10-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.
இதில் 380மாணவ, மாணவிகளுக்கு நிர்மலாசீதாராமன் பட்டங்களை வழங்கினார். இதில் 6 பேருக்கு தங்கபதக்கங்களுடன் பிஎச்டி பட்டங்களும் 53 பேருக்கு எம்.டெக்.110 பேருக்கு இரட்டைப் பட்டம், 211 பேருக்கு பி.டெக். பட்டங்களை பெற்றனர்.
பின்னர் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: சுதந்திர தின கொடியேற்றத்தின்போது பிரதமர் மோடி ஜெய் விக்யான், ஜெய்ஹன்சந்தான் ஆகிய புதிய முழக்கங்களை அறிமுகப்படுத்தினார். இதன் பொருள் விஞ்ஞானத்தையும் புதிய தொழில் நுட்பத்தையும் போற்ற வேண்டும் என்பதாகும்.
இந்த அரசும் அதை நோக்கித்தான் பயணிக்கிறது. இனி அறிவியலுக்கும் தொழில் நுட்ப வளர்ச்சிக்கும்தான் காலம். மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை காரணமாக இந்தியா உற்பத்தி மற்றும் வடிவமைத்தல் பிரிவுகளில் மிகச்சிறந்த உயரத்தை அடையும்.
இந்திய கல்வி எந்த நாட்டையும்விட உயர்ந்தது. ஏனெனில் உலகத்தில் உள்ள 60 மிகப்பெரிய நிறுவனங்களின் சி.இ.ஓ.க்கள் இந்தியர்களாகத்தான் உள்ளனர்.500 நிறுவனங்களில் சி.இ.ஓ.க்களுக்கு அடுத்த இடத்தில் இந்தியர்கள் உள்ளனர்.
உலக அளவில் சிலிகான் வேலியில் 25 சதவீத ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இந்தியர்களால் நடத்தப்படுகிறது. உலக அளவில் 100 முக்கியத்துவம் மற்றும் பலம் வாய்ந்த தலைவர்கள் இந்தியாவில்தான் உள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு காப்புரிமை கேட்டு 42,000 விண்ணப்பங்கள் வந்தன. இந்த 2022-ம் ஆண்டு 66,400 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
இதிலிருந்தே நமதுபலத்தை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். 2047-ல் விஞ்ஞானம், தொழில்நுட்ப ரீதியாக இந்தியாவை முதலிடத்துக்கு கொண்டு வர வேண்டும். தேவையை அறிந்து அதற்கேற்ப மாணவர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு பெற்றோர் உறுதுணையாக இருக்கவேண்டும்.
புதிய கல்விக்கொள்கையில் உயர்கல்விக்கு நிறைய வாய்ப்பு கொடுத்துள்ளது. உலகம் எங்கு நகர்கிறது. எந்த தொழில்நுட்பம் நோக்கி நிகர்கிறது என்பதை பெற்றோர் அறிந்து கொள்ள வேண்டும்.
இந்தியா வளர்ச்சியை நோக்கிசரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. 2028-ம் ஆண்டுக்குள் வேலை செய்வோர் எண்ணிக்கையில் நாம் சீனாவை விஞ்சுவோம். 2036-ம் ஆண்டுக்குள் மொத்த மக்கள் தொகையில் 65% பேர் உழைக்கும் வர்க்கத்தினராக இருப்பார்கள். இதன்மூலம், தேசத்தின் வளர்ச்சி அதிமாகும். இவ்வாறு பேசினர்.
விழாவில் ஐஐஐடிடிஎம் நிர்வாகக் குழுத் தலைவர் எஸ்.சடகோபன், இயக்குநர் டிவிஎல்என் சோமயாஜுலு, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்துகொண்டனர். முன்னதாக கல்வி நிறுவனத்தின் ஆடிட்டோரியத்துக்கு நிதி அமைச்சர் அடிக்கல் நாட்டியதுடன் ரோபோட்டிக்ஸ் மையத்தை திறந்து வைத்தார்.
காமாட்சி அம்மன் வழிபாடு: பட்டமளிப்பு விழாவை முடித்துவிட்டு காஞ்சிபுரம் அமைச்சர் வந்தார். பின்னர் காமாட்சி அம்மன் கோயிலில் அம்மனை தரிசித்தார். முன்னதாக அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் பேட்டரி கார் மூலம் கோயிலின் உள் பிரகாரத்தை சுற்றி வந்து வழிபாடு நடத்தினார். அமைச்சரின் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.