Published : 09 Sep 2022 04:23 AM
Last Updated : 09 Sep 2022 04:23 AM

வெளியானது நீட் தேர்வு முடிவுகள் | தமிழக மாணவ, மாணவிகள் 67,787 பேர் தேர்ச்சி - மாநில அளவில் மதுரை மாணவர் முதலிடம்

சென்னை: நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் நள்ளிரவில் வெளியிடப்பட்டன. இதில், தமிழக மாணவ, மாணவிகள் 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, கடந்த ஆண்டைவிட 3 சதவீதம் குறைவாகும்.

மதுரை மாணவர் திரிதேவ் விநாயகா, தேசிய அளவில் 30-வது இடமும் மாநிலத்தில் முதல் இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் 497 நகரங்களில் 3,570 மையங்களில் கடந்த ஜூலை 17-ம் தேதி நடைபெற்றது. மொத்தம் 17 லட்சத்து 64,571 பேர் தேர்வில் பங்கேற்றனர். தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்து 32,167 மாணவர்கள் தேர் வெழுதினர்.

நீட் தேர்வு முடிவுகள் https:// neet.nta.nic.in என்ற இணையதளத்தில் நேற்று முன்தினம் இரவு 11.15 மணிக்கு வெளியிடப்பட்டது. மேலும், மாணவர்களின் மின்னஞ்சலுக்கு மதிப்பெண் பட்டியல் அனுப்பப்பட்டது.

இந்த தேர்வில் நாடு முழுவதும் 4 லட்சத்து 29,160 மாணவர்கள், 5 லட்சத்து 63,902 மாணவிகள், 7 திருநங்கைகள் என மொத்தம் 9 லட்சத்து 93,069 (56.28%) பேர் தேர்ச்சியடைந்து, மருத்துவம் படிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இது கடந்த ஆண்டைவிட 0.06% சதவீதம் குறைவாகும். அதேபோல், ஓபிசி - 4 லட்சத்து 47,753, எஸ்சி - ஒரு லட்சத்து 31,767, எஸ்டி - 47,295, பொதுப்பிரிவு (யுஆர்) - 2 லட்சத்து 82,184, இடபிள்யூஎஸ் - 84,070 பேர் இடம் பிடித்துள்ளனர். மேலும், மாற்றுத் திறனாளிகள் 2,717 பேர் மருத்துவம் படிக்க தகுதி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி விகிதம் சரிவு

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. 2018-ம் ஆண்டு 56.27 சதவீதமாக இருந்த தேர்ச்சி அளவு 2019-ல் 56.50 சதவீதமாக உயர்ந்தது. அதன்பின் 2020-ல் 56.44%, 2021-ல் 56.34%, 2022-ல் 56.28% என்ற அளவில் தேர்ச்சி விகிதம் குறைந்துவிட்டது.

நீட் தேர்வில் ராஜஸ்தானை சேர்ந்த மாணவி தன்ஷிகா, டெல்லியை சேர்ந்த மாணவர் வத்சா ஆசிஷ் பத்ரா, கர்நாடகா மாணவர்கள் ஹரிஷிகேஷ் நாக்பூஷண் கங்குலி, ருச்சா பாவசே ஆகியோர் 720-க்கு 715 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். முதல் 50 இடங்களில் கர்நாடகாவில் இருந்து 9 பேரும், தெலங்கானா, டெல்லியில் தலா 5 பேரும், தமிழகத்தில் 2 பேரும் இடம்பெற்றுள்ளனர்.

மதுரையைச் சேர்ந்த மாணவர் எஸ்.திரிதேவ் விநாயகா, 705 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் 30-வது இடமும், மாநில அளவில் முதலிடமும் பிடித்துள்ளார். சென்னை மாணவி எம்.ஹரிணி, 702 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் 43-வது இடமும், தமிழகத்தில் 2-வது இடமும் பெற்றுள்ளார். நீட் தேர்வில் தேசிய அளவில் உத்தர பிரதேசம், மகாராஷ்டிர மாநில மாணவர்களே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கட்-ஆப் மதிப்பெண்

நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்களுக்கான கட்-ஆப் மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, பொதுப்பிரிவு மற்றும் இடபிள்யூஎஸ் பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 715 முதல் 117 வரையான மதிப்பெண்களில் (50 பர்சன்டைல்) 8 லட்சத்து 81,402 பேர் இடம்பெற்றுள்ளனர். ஓபிசியில் 116 முதல் 93 வரையான மதிப்பெண்களில் (40 பர்சன்டைல்) 74,458 பேரும், எஸ்சி, எஸ்டி பிரிவில் 116 முதல் 93 மதிப்பெண்களில் (40 பர்சன்டைல்) 36,652 பேரும் இடம்பெற்றுள்ளனர்.

பொதுப்பிரிவு மற்றும் இடபிள்யூஎஸ் பிரிவு மாற்றுத் திறனாளிகளுக்கு 116 முதல் 105 வரையான மதிப்பெண்களில் (45 பர்சன்டைல்) 328 பேரும், ஓபிசி, எஸ்சி, எஸ்டி மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 104 முதல் 93 வரையான மதிப்பெண்களில் (40 பர்சன்டைல்) 229 பேரும் இடம் பெற்றுள்ளனர். நீட் தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் சென்ற ஆண்டைவிட சரிந்துள்ளதால் கட்-ஆப் மதிப்பெண்ணும் சற்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் பின்னடைவு

ஒட்டுமொத்த தேர்ச்சியில் மற்ற மாநிலங்களைவிட தமிழகம் பெரிதும் பின்னடைவை சந்தித்துள்ளது. தமிழகத்தில் 1,32,167 மாணவர்கள் தேர்வெழுதியதில் 67,787 (51.30%) பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். முந்தைய ஆண்டுகளை ஒப்பிடும்போது, 2020-ல் 57.44%, 2021-ல் 54.40% நடப்பு ஆண்டு தேர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்துள்ளது.

தேர்ச்சி விகிதத்தில் டெல்லி (75.9%) முதலிடமும், அதற்கடுத்த இடங்களை சத்தீஸ்கர் (72.65%), ராஜஸ்தான் (70.49%) மாநிலங்களும் பெற்றுள்ளன. இந்த பட்டியலில் தமிழகம் 29-வது இடத்தில் உள்ளது. 2020-ல் 15-வது இடத்திலும், 2021-ல் 23-வது இடத்திலும் இருந்த தமிழகம் தற்போது 29-வது இடத்துக்கு பின்தங்கியுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 17 ஆயிரத்துக்கும் மேலான மாணவர்கள் தேர்வு எழுதியிருந்தனர். இதில், பெரும்பாலானோர் தோல்வி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீட் தேர்வில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை பொறுத்தமட்டில் 2018-ம் ஆண்டு 22 சதவீதம், 2019-ல் 13.46%, 2020-ல் 25.83%, 2021-ல் 24.27% என்ற அளவில் இருந்தது. நடப்பாண்டும் அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 20 முதல் 30 சதவீதம் வரையே இருக்க வாய்ப்புள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். எனினும், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x