

பெரம்பலூர்: மருத்துவ இளநிலை படிப்புக்காக நிகழாண்டு நடைபெற்ற நீட் தேர்வை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயின்ற 286 பேர் எழுதினர். இதில் 44 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவர்களில் 8 பேர் 200-க்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதில், வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவியான எஸ். சுபாஷினி 399 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.
கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகள் 180 பேர் நீட் தேர்வு எழுதினர். இதில் 26 பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டின் கீழ் 5 பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்கவும், ஒரு மாணவருக்கு பிடிஎஸ் (பல் மருத்துவம்) படிக்கவும் இடம் கிடைத்தது. நிகழாண்டு 44 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், 8 பேருக்கு உள் இட ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ் இடம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், பிளஸ் 1, பிளஸ் 2 அரசுப் பொது தேர்வு, தேசிய வருவாய் வழி திறனறி தேர்வு ஆகியவற்றில் மாநில அளவில் முதலிடமும், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் 2-ம் இடமும் பெற்றுள்ளது.