

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் தேவநாத சுவாமி நகர், ஜி.ஆர்.கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பாலன் மகள் பிருந்தா. இவர், தனது தந்தை உயிரிழந்த நிலையில், தாயார் கவனிப்பில் படித்து வந்தார்.
விழுப்புரம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில வழியில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை படித்தார்.பின்பு அங்கு கடந்தாண்டு உருவாக்கப்பட்ட உண்டு உறைவிட பள்ளியில் தங்கி பிளஸ் 2 பயின்றார்
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 99 மதிப்பெண்கள், ஆங்கிலம் 94 மதிப்பெண்கள், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியியல் ஆகிய நான்கு பாடங்களிலும் தலா 100 மதிப்பெண்கள் என 600க்கு 593 மதிப்பெண்கள் பெற்றார்.
இதைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியலில், அரசுப் பள்ளி அளவில் பிருந்தா கட்ஆப் 200க்கு 200 எடுத்து முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். இவர் பொதுப் பிரிவில் 35-வது இடம் பிடித்துள்ளார்.
ஆனாலும், நீட் தேர்வு எழுதியிருந்த பிருந்தா அத்தேர்வின் முடிவுக்குப் பின் அடுத்து படிக்க உள்ளது குறித்து முடிவெடுக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று வெளியான நீட் தேர்வில் 720க்கு 467 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். இதையடுத்து அவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் பி இ (இ சி இ) படிக்க உள்ளதாகவும் ,என் உயர்கல்விக்கான உதவிகளைச் செய்வதாக அமைச்சர் பொன்முடி, தொகுதி எம்எல்ஏ லட்சுமணன் ஆகியோர் தெரிவித்திருப்பதாகவும் கூறினார்.
மாணவி பிருந்தா பெற்றுள்ள நீட் மதிப்பெண்களுக்கு, அரசுஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரியில் பயில வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை இருந்தாலும் தனியார் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் அளவுக்கு குடும்ப சூழ்நிலை இடமளிக்காததால் அவர் பொறியியல் படிப்பைத் தேர்வு செய்துள்ளார்.
மேலும் இவர் ஆங்கில வழியில் படித்ததால், அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கான இடஒதுக் கீட்டு வாய்ப்பு பறிபோனது குறிப்பிடத்தக்கது.