

சென்னை: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் எனும் தனித்துறை தொடங்க தமிழக அரசு ரூ.5 கோடி நிதி வழங்கி ஆணையிட்டுள்ளது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யூ) இந்திய மொழிகள் மையம் தமிழ்ப் பிரிவு, இந்திப் பிரிவு, உருதுப் பிரிவு, இந்தி மொழியாக்கப் பிரிவு, கன்னட மொழி இருக்கை, ஒடிய மொழி இருக்கை, வங்க மொழி இருக்கை ஆகிய அமைப்புகளைக் கொண்டு இயங்குகிறது.
தமிழ் இலக்கியவியல் ஆய்வு, தமிழ் மற்றும் திராவிட மொழியியல் ஆய்வு, தமிழ் மற்றும் தென்னக வரலாற்றியல், சமூகவியல் ஆய்வு என மூவகையாக விரிவுப்படுத்தி பல்கலைக்கழகத்திலுள்ள தமிழ்ப் பிரிவு இனி, தமிழ் இலக்கியவியல் எனும் தனித்துறையாக முகிழ்த்து எழச் செய்துள்ளது தமிழக அரசு. இதற்கென ரூ.5 கோடி நிதி வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு செய்தமைக்கு, இப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சாந்தி பண்டிட், கடந்த 5-ம் தேதி தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
தனிப்பெரும் துறையாக உருவெடுக்கும் தமிழ் இலக்கியவியல் துறை வாயிலாக ஒப்பாய்வு, முதுகலை தமிழிலக்கியப் படிப்பு, வல்லுநர்வழி மொழியாக்கம், விருந்துநிலைப் பேராசிரியர்வழி ஆய்வுப் பெருந்திட்டம், முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி, தமிழாசிரியர்களுக்கு ஆய்வுப் பயிலரங்கம், அயலகப் பல்கலைக்கழகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல், தரமான நூல்களை வெளியிடுதல், ஜேஎன்யூ தமிழியல் எனும் பெயரில் 100 பக்க அளவில் ஆண்டுக்கு இருமுறை ஆய்வு இதழ் வெளியிடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். வடஇந்தியாவில் தொடங்கப் பெறும் முதல் தமிழ்த் துறையாகவும் தமிழாய்வுகளை விரைந்தும் விரிந்தும் செய்யும் பெருமிதமும் தனித்தியங்கும் தன்மையையும் கொண்டு உலக அளவில் கவனம் பெறும் துறையாக தமிழ் இலக்கியவியல் துறை மாறும் எனவும் தமிழ்ச் சான்றோர்களும், தமிழார்வலர்களும் கருதுகின்றனர் என்று தமிழக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில், “மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, தமிழுக்குச் செம்மொழித் தகுதி பெற்றுத் தந்ததன் விளைவாக, தலைநகர் டெல்லியில் இயங்கி வரும் ஜேஎன்யூவில் தமிழிருக்கை தோற்றுவிக்கப்பட்டு, தற்போது இந்திய மொழிகள் மையத்தின் ஒரு பிரிவாக, தமிழ் ஒப்பியல் இலக்கிய ஆய்வுகளுக்கு அரிய பங்காற்றி வருகிறது. தலைநகரில் தமிழ் தனித் துறையாக, தனித்த அடையாளத்தோடு செயல்படுவதற்கும், ஆய்வுகளை முன்னெடுப்பதற்கும், முதுநிலைப் பட்டப்படிப்பை அளிப்பதற்கும் ஏதுவாக, தமிழ் காக்கும் நமது அரசு ரூ.5 கோடி நிதியை வழங்கியுள்ளது. வளமான, நுண்மையான, உலகத்தரத்திலான தமிழியல் ஆய்வுகள் பெருக வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஜேஎன்யூவில் தமிழிருக்கை தோற்றுவிக்கப்பட்டு, தற்போது இந்திய மொழிகள் மையத்தின் ஒரு பிரிவாக, தமிழ் ஒப்பியல் இலக்கிய ஆய்வுகளுக்கு அரிய பங்காற்றி வருகிறது.