இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையே கல்வித் துறை ஒத்துழைப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையே கல்வித் துறை ஒத்துழைப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையே கல்வித்துறை ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக்குறிப்பில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கல்வித்துறை ஒத்துழைப்பில், இந்திய அரசின் கல்வி அமைச்சகம், ஐக்கிய அரபு அரசின் கல்வி அமைச்சகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புதல் வழங்கியுள்ளது. கல்வியில் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகமிடையே தற்போதுள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது, இந்திய அரசின் ஈடுபாட்டை விரிவுப்படுத்துவதே புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.

கல்வித் துறையில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் 2015-ல் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் 2018 ஆம் ஆண்டில் காலாவதியானது. தொடர்ந்து 2019-ல் இருநாடுகளிடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட முன்மொழியப்பட்டது. இந்த புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்திய கல்வித்துறையில், தேசிய கல்விக் கொள்கை 2020 மூலம் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்களை உள்ளடக்கியது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், தகவல் பரிமாற்றம், தொழில் நுட்பம், தொழில் கல்வி மற்றும் பயிற்சி, ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாடு, இருநாட்டு உயர் கல்வி நிறுவனங்களிடையே, கூட்டு மற்றும் இரட்டைப் பட்டப்படிப்பை வழங்குவது உள்ளிட்ட திட்டங்களுக்கான ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

இந்த புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கல்வி ஒத்துழைப்பை அதிகரித்து, இந்தியா, ஐக்கிய அரபு அமீரகத்துக்கிடையே கல்விக்கான இயக்கத்தை அதிகரிக்கும். இந்த பரஸ்பர தகுதிகளை அங்கீகரிக்கும் வகையில் தகவல் பரிமாற்றத்தை எளிமையாக்கும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் மற்றும் இருதரப்பினரின் ஒப்புதலுடன் தானாகவே புதுப்பிக்கப்படும். இந்த புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் 2015-ல் ஐக்கிய அரபு அமீரகத்துடன் கையெழுத்திட்ட முந்தைய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செல்லாததாக்கும். பின்னர் அது செயல்படாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in