

சென்னை: மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று (செப். 7) காலை வெளியிடப்படுகிறது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்திவருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் 497 நகரங்களில் அமைக்கப்பட்ட 3,570 மையங்களில் கடந்த ஜூலை 17-ம் தேதி நடந்தது. இந்த தேர்வை 17.78 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்றனர்.
நீட் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடையாததால் முடிவுகள் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டது. இதனால் நாடு முழுவதும்இளநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை தொடங்குவது தள்ளிப்போனது. தமிழகத்தில் நடத்தப்படவிருந்த இளநிலை பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வும் தள்ளிவைக்கப்பட்டது. இதனால், நீட் தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள், செப். 7-ம் தேதி வெளியாகும் என்று என்டிஏ அறிவித்தது. அதற்கேற்ப நீட் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு, தேர்வர்களின் ஓஎம்ஆர் விடைத்தாள் நகல்கள் கடந்த ஆக. 31-ம் தேதி வெளியிடப்பட்டன.
இதைத் தொடர்ந்து தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்படுகிறது. மாணவர்கள் தங்கள் மதிப்பெண் விவரங்களை https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் தமிழகத்தில் இளநிலை பொறியியல் படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.