

கோவையில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களுடன் ‘யாழ் நூலகம்’ திறக்கப்பட்டுள்ளது.
கோவை மணியகாரன்பாளையம் ராக்காச்சி கார்டனைச் சேர்ந்தவர் மு.கிருஷ்ணசாமி. கோவை மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலரான இவர், மதிமுக மாநில தீர்மானக் குழு உறுப்பினராக உள்ளார். இவர் மணியகாரன்பாளையம் நேரு அவென்யூ பகுதியில் ரூ.35 லட்சம் மதிப்பில் தரைத்தளம் மற்றும் 2 தளங்களுடன் கூடிய ‘வைகோ வளாகம்’ கட்டியுள்ளார்.
இந்த வளாகத்தில் உள்ள நூலகம் மற்றும் கூட்டரங்கத்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று முன்தினம் திறந்து வைத்தார். இது தொடர்பாக கிருஷ்ணசாமி கூறியதாவது: கடந்த 1981-ம் ஆண்டு இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உள்ளபழமை வாய்ந்த நூலகம், சிங்களர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது.
இதில் நூலகத்தில் உள்ள நூல்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்தன. அதன் நினைவாக, இந்த வைகோ வளாகத்தின் முதல் தளத்தில் யாழ் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆன்மிகம், அரசியல், பகுத்தறிவு, பொது அறிவு, கவிதை, ஆய்வுக்கட்டுரைகள், வேளாண்மை, போட்டித் தேர்வுகள் தொடர்பாக 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் வைக்கப்பட்டுள்ளன.
தவிர, தினசரி நாளிதழ்களும் வைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் இந்த நூலகம் செயல்படும். மக்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். நூலக வளாகத்தில் சுதந்திரத்துக்காக போராடிய தமிழகத்தை சேர்ந்த தியாகிகளின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
முள்ளிவாய்க்கால் முற்றத்தின் நினைவாக, அங்கிருந்து எடுத்து வரப்பட்ட மண் அடங்கிய பெட்டியில் அணையாத விளக்கு ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது தளத்தில் உள்ள கூட்டரங்கில் காலை 6 மணி முதல் 8 மணி வரை ஆண்களும், காலை 10 மணி முதல் 12 மணி வரை பெண்களும் உடற்பயிற்சி, யோகா பயிற்சி மேற்கொள்ளலாம்.
தவிர, இந்த கூட்டரங்கில் வாரத்தில் 2 நாட்கள் தமிழ், ஆங்கில இலக்கண வகுப்புகள் நடத்தப்படும். மாதத்தின் முதல் வியாழக்கிழமை மாலை புகழ் பெற்ற மருத்துவர்களின் மூலம் மருத்துவ ஆலோசனை வழங்கப்படும். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தன்னார்வ ஆசிரியர்கள் மூலம் மாலையில் இலவச டியூஷனும் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.