

கள்ளக்குறிச்சி: “இரட்டை தேர்ச்சி முறையில் பயின்றதால் இளம் வயதிலேயே ஆட்சியர் ஆனேன்” என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். மேலும், கல்வி மீது தனது தாயார் கொண்டிருந்த ஆர்வம் குறித்தும் அவர் விவரித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா, நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா மற்றும் ஆசிரியர் தினவிழா எனும் முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட திருக்கோவிலூர் கோட்டாட்சியர் பேசுகையில், "உங்களைப் போன்று நானும் அரசுப் பள்ளியில் பயின்றுதான் இந்த நிலைக்கு உயர்ந்தேன். நான் பள்ளிப் படிப்பை படித்து விட்டு வெளியேறிய ஆண்டுக்கு அடுத்த ஆண்டு முதல் தான் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தியது.
அரசு வழங்கிய இலவச சைக்கிள் நமக்கெல்லாம் கிடைக்காமல் போய்விட்டதே என அப்போது நான் வருந்தினேன், தற்போது அரசு பல்வேறு திட்டங்களை மாணவர்களுக்காக செயல்படுத்தி வருகிறது. அதைப் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறிச் செல்லவேண்டும். படிக்கும் போதே திட்டமிட்டு, போட்டித் தேர்வுகளை எழுதுங்கள். அவை உங்களுக்கு கை கொடுக்கும்" என்றார்.
தொடர்ந்து கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஷ்ரவன்குமார் பேசும்போது, "மற்ற மாநிலத்தைக் காட்டிலும் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அவற்றை பயன்படுத்திக் கொண்டு, உங்கள் குடும்பச் சூழலை முன்னேற்றுங்கள், நீங்கள் உங்கள் வாழ்வில் பிரகாசிக்கலாம்.
அப்போது மாணவி ஒருவர், “உங்களை இந்த உயர உத்வேகம் அளித்தது?” என கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலலளித்துப் பேசிய ஆட்சியர், "நான் ஆந்திர மாநிலத்தில் பிறந்தேன். எனக்கு எனது தாய்தான் முன்னுதாரணம். அவருக்கு இளம் வயதிலேயே திருமணம் நடைபெற்ற போதிலும், திருமணத்திற்கு பிறகும் படிக்கத் துவங்கினார். நான் பள்ளிச் செல்லும்போது, அவர் கல்லூரி வகுப்பிற்குச் செல்வார். இளங்கலை முடித்து, முதுகலையும் முடித்து, கல்வியியில் பட்டம் முடித்து ஆசிரியரானார். அவரை பார்த்து நானும் படித்தேன்.
சிறுவயதிலேயே் நன்றாக படித்து பள்ளியிலேயே முதல் மாணவனாக திகழ்ந்தேன். எனது படிப்புத் திறனால் பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும்போது, 4 வகுப்புக்கு தேர்ச்சி பெற்றேன். இந்த இரட்டை தேர்ச்சி முறையால் 14 வயதிலேயே 10-ம் வகுப்புத் தேர்வெழுதும் நிலை உருவானது. அப்போது பள்ளிக் கல்வித் துறை அதற்கு அனுமதிக்கவில்லை. இருப்பினும் மருத்துவச் சான்றிதழ் பெற்று, சிறப்பு அனுமதியுடன் 10-ம் வகுப்புத் தேர்வெழுதினேன். அடுத்து ஐஐடி முடித்து மும்பையில் பணியில் சேர்ந்தேன்.
படித்த படிப்புக கை நிறைய சம்பளம் பெற்ற போதிலும், பொதுவாழ்வில் ஈடுபடவேண்டும் என்பதற்காக மத்திய தேர்வு வாரியத்தின் யுபிஎஸ்சி தேர்வு எழுதி, திருப்பூர் சார் ஆட்சியர், கோவை ஆணையர், வேளாண்மைத் துறையில் கூடுதல் இயக்குநர் என பொறுப்புகளை வகித்து தற்போது கள்ளக்குறிச்சி ஆட்சியராக பணியாற்றுகிறேன். எனவே, நீங்களும் அரசு வழங்கும் சலுகைகளை பயன்படுத்தி படிப்புத் திறனை வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.
இந்த நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.ஜே.மணிக்கண்ணன், உளுந்தூர்பேட்டை நகர்மன்றத் தலைவர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.